சங்கராபுரம் அருகே கழிவுநீர் வாய்க்கால் அருகே உணவு சமைத்து பொதுமக்கள் போராட்டம்
*அதிகாரிகளிடம் வாக்குவாதம்- பரபரப்பு
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே கழிவுநீர் வாய்க்கால் அருகே உணவு சமைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ராவத்தநல்லூர்.
இங்கு வடக்கு தெரு, தெற்கு தெரு, சேராப்பட்டு சாலை, புதூர் சாலை, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.
சேராப்பட்டு சாலை பள்ளிவாசல் எதிரே கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டு கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் கழிவுநீர் செல்ல வழிவகை இல்லாததால் பள்ளிவாசல் தெரு, புதூர் சாலை, சேராப்பட்டு சாலை உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பள்ளிவாசல் எதிரே நேற்று கழிவுநீர் கால்வாய் அருகே வாயில் கருப்பு துணி கட்டி சாலை ஓரத்தில் அமர்ந்து சமைத்து சாப்பிடும் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், வடபொன்பரப்பி இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, இங்கு அதிக அளவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் உடல் நல குறைவு ஏற்படுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் ஓரிரு நாட்களில் கழிவுநீர் செல்ல வழிவகை செய்யப்படும் என்று கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.