தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் கைதான 6 வழக்கறிஞர்கள் நிபந்தனையை மீறியது ஏன்? ஐகோர்ட் கேள்வி
சென்னை: தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 6 வழக்கறிஞர்களை விடுவித்த உத்தரவில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் நடந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாகவும் அவர்களை விடுவிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை, விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்கள், சட்ட கல்லூரி மாணவர்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர் சந்திப்போ, நேர்காணலோ அல்லது எந்தவிதமான அறிக்கையும் அளிக்ககூடாது என்ற நிபந்தனையும் நீதிமன்றம் விதித்தது. இந்நிலையில், வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி வழக்கறிஞர் பாரதி செய்தியாளர்களை சந்தித்துள்ளார். வழக்கறிஞர்களே நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மீறியது ஏன் என்று மனுதாருக்கு கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ப.பா.மோகன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி,‘வழக்கு குறித்து மட்டும் தான் பாரதி பேட்டியளித்தார். நீதிமன்ற உத்தரவை மீறவில்லை. கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞர்களை காவல்துறையினர் துன்புறுத்தி உள்ளனர். கைது செய்தவர்களின் செல்போன்களை கைப்பற்றி வைத்துள்ளனர்,’ என்று தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்யுங்கள் என்று மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர். மேலும், இடைக்கால உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர்.