காரைக்குடியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
காரைக்குடி: காரைக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கராபுரம், அரியக்குடி, இலுப்பக்குடி, தளக்காவூர், கோவிலூர் பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், ‘ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுவது போல் ஊதியம் ரூ.19,500 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு ஏஏடியூசி தொழிற்சங்கம் ஆதரவு தெரிவித்தது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.