தூய்மைப் பணியாளர்கள் பிரச்னைக்கு உரிய தீர்வு: கமல்ஹாசன் வலியுறுத்தல்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் எம்பி, நேற்று சென்னையில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்கள் பிரச்னைகள், அவர்கள் கோரிக்கைகள் குறித்து, நிச்சயமாக பேச வேண்டும். இதை ரொம்ப நிதானமாக, பின்பு பேசலாம் என்று இருக்க முடியாது. அவசரமாக உடனடியாக பேசி முடிவு எடுக்க வேண்டும். இதுகுறித்து நாங்களும், முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம்.
இவர்களின் கோரிக்கைகள் குறித்து, நான் நீண்ட நாட்களாக பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். தம்பி திருமாவளவனின் சிற்றன்னை மறைந்துள்ளார். அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நேற்றே திருமாவளவனுக்கு தெரியும். ஆனால் அவரின் தொண்டர்கள் மகிழ்ச்சிக்காக, பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் நான் பேசிய பதிவை அனுப்பி உள்ளேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.