தூய்மைப்பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக போலியான தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப் பணியாளர்கள் 12 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமப்படுவதாகவும், போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும் வழக்கறிஞர் வினோத் என்பவர் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர முறையீடு செய்தார்.
அப்போது அரசு தரப்பில், சேப்பாக்கம், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் மீண்டும் தலைமை அமர்வில் நேற்றும் இந்த பிரச்னை குறித்து முறையீடு செய்தார். அப்போது, மனுவில் குறைபாடு உள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
தினந்தோறும் முறையீடு செய்தால் வழக்கை விசாரணைக்கு எடுக்க மாட்டோம் என்று தலைமை நீதிபதி எச்சரித்தார். அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது. ஆனால், அவர்களுக்கு எதிராக அரசு செயல்படுவதாக ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள் என்றார். இதைக்கேட்ட தலைமை நீதிபதி, மனு விசாரணைக்கு வரும்போது அரசு தரப்பு கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றார்.