துப்புரவு ஆய்வாளர் பதவி உயர்வு: வரும் 23க்குள் தகுதியான பட்டியல் அனுப்ப வேண்டும்: நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவு
சென்னை: துப்புரவு ஆய்வாளர் பதவி உயர்விற்கு தகுதியான பட்டியல் தயார் செய்து வரும் 23ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று நகராட்சி நிர்வாக இயக்குநர் அனைத்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள், ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குநர், அனைத்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள், ஆணையர்களுக்கு அனுப்பிய கடிதம்:
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப அளவுகோல் நிர்ணயம் செய்து ஒரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவித்து, ஏற்கனவே உள்ள பணியிடங்களை மறுசீரமைத்து முறைப்படுத்திட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும் அரசாணையின்படி தமிழ்நாட்டில் உள்ள 145 நகராட்சிகளில், நகராட்சிகளின் நிலைகளுக்கேற்ப துப்புரவு ஆய்வாளர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சிறப்பு நிலை நகராட்சிகள் 16, ஒரு நகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 6, அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 96, தேர்வுநிலை நகராட்சிகள் 28, ஒரு நகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 4, அனுமதிக்கப்பட்ட மொத்த பயணியிடங்கள் 112, நிலை I, நகராட்சி 33, ஒரு நகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 2, அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 66, நிலை II நகராட்சிகள் 68, ஒரு நகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 1,
அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 68 என மொத்தம் நகராட்சிகள் 145, ஒரு நகராட்சிக்கு அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 342 ஆகும். மேலும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துப்புரவு ஆய்வாளர் பணியிடத்திற்கு பதவி உயர்வு வழங்குவது குறித்த தகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள்படி துப்புரவு ஆய்வாளர் பணியிடங்களுக்கான நியமன அலுவலர் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆவார்.
எனவே துப்புரவு ஆய்வாளர் பதவி உயர்விற்கு தகுதியான நபர்கள் பட்டியல் தயார் செய்ய கடந்த மார்ச் 15ம் தேதி தகுதியுடைய துப்புரவு பணி மேற்பார்வையாளர் மற்றும் களப்பணி உதவியாளர் ஆகியோர்களின் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வரும் 23ம் தேதிக்குள் அனைத்து நகராட்சி ஆணையர்கள் அனுப்ப வேண்டும். மேலும் நகராட்சி ஆணையர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஒருங்கிணைத்து தொகுப்பறிக்கையாக வரும் 23ம் தேதிக்குள் இந்த அலுவலகத்திற்கு அனைத்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்கள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.