அயோத்தியில் விளக்குகளை துடைப்பத்தால் அணைத்த துப்புரவு தொழிலாளர்கள்: சமாஜ்வாடி தலைவர்கள் கண்டனம்
அயோத்தி: அயோத்தியில் தீபத்திருவிழா கொண்டாட்டங்களின்போது ஏற்றப்பட்ட தீபங்களை துப்புரவு தொழிலாளர் அணைப்பதற்கு சமாஜ்வாதி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 19ம் தேதி தீபத்திருவிழா நடைபெற்றது. இதில் 26லட்சத்துக்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்நிலையில் அகல்விளக்குகள் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே நகராட்சியை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்கள் துடைபங்களால் எரியும் விளக்குகளை தள்ளி அணைக்கின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகின்றது.
இது குறித்து சமாஜ்வாடி மூத்த தலைவர் ஜெய் சங்கர் பாண்டே கூறுகையில், ‘‘நகராட்சி துப்புரவு தொழிலாளர்களின் செயல் மக்களின் மத உணர்வுகளை ஆழமாக புண்படுத்தி உள்ளது” என்றார் .
உள்ளூர் சமாஜ்வாடி தலைவர்களும் இதேபோன்ற உணர்வை வெளிப்படுத்தி உள்ளனர். சர்ச்சைக்கு பதிலளித்துள்ள நகராட்சி ஆணையர் ஜெயேந்திர குமார், துப்புரவு தொழிலாளர்கள் வந்தபோது சில விளக்குகள் எரிந்து கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் பெரும்பலானவை அணைந்துவிட்டன என்று தெரிவித்துள்ளார்.