வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மணல் மூட்டைகள், காலி சாக்குகள், சவுக்குகள் தயார்
*ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
*திருவாரூர் கலெக்டர் வேண்டுகோள்
திருவாரூர் : வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மணல் மூட்டைகள், காலி சாக்குகள், சவுக்குகள் தயாராக உள்ளது. அனைத்து துறையினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ள தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மோகனச்சந்திரன் ஆற்றுபகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம், எண்கண் வெள்ள தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், வெட்டாறு, ஓடம்போக்கியாறு, வாளவாய்க்கால் ஆகியவற்றின் நீரின் அளவு மற்றும் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகள், காலி சாக்குகள், மணல் மற்றும் சவுக்கு கம்புகளை கலெக்டர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் முள்ளியாறு தலைப்பு-தட்டாங்கோவில் மற்றும் மன்னார்குடி வட்டம் சேரன்குளம் மதகு ஆகிய பகுதியில் வெள்ளப்பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல நீடாமங்கலம் கோரையாறு தலைப்பில் தயாராக உள்ள மணல் மூட்டைகள் மற்றும் வெள்ள தடுப்பு பொருட்களை திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது, வடகிழக்கு பருவமழையின் போது, மாவட்டத்தில் பாதிக்க கூடிய பகுதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் அலுவலர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து வசதிகளும் மற்றும் தங்கவைப்பதற்க்கான முகாம்கள் பாதுகாப்பானதாக இருக்கிறதா எனவும், போதுமான வசதிகள் இருக்கிறதா என்பதை அலுவலர்கள் தற்போதே ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
முகாமில் உள்ளவர்களுக்கு குடிநீர், உணவு உடனடியாக கிடைக்கும் வகையில் உணவுபொருட்களின் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். தேவையான இடத்தில் மின்சார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மழைநீர் தேங்கும் பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்ற மோட்டர் பம்புகளை தயார்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். சாலைகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த தேவையான மரம் அறுக்கும் இயந்திரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
தன்னார்வலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். மருத்துவதுறையினர் பாம்பு கடி உட்பட அனைத்து மருந்துகளையும் தயாராக வைத்து கொள்ள வேண்டும். அனைத்து துறையினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எந்த பேரிடர் நிலைமையும் எதிர்கொள்ள மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்கவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.