சந்தன மரங்களை வெட்டி கடத்திய கும்பல்: போலீசார் விசாரணை
கோவை: கோவை காந்திமாநகர் மாநகராட்சி பூங்காவில் இருந்த 4 சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாநகர் பகுதியில் பொது இடங்கள், வீடுகள், பூங்காக்கள், காலியிடங்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் சந்தன மரங்கள் உள்ளன. மாநகரின் மத்திய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகம், வன அலுவலர் குடியிருப்பு, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம், காவல் துறை ஆணையர் போன்ற அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதிகளில் உள்ள சந்தன மரங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம கும்பல் தொடர்ந்து வெட்டி கடத்தி வந்தனர். இதனை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இதனால், தற்போது அந்த பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தும் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும், கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் வீடுகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் உள்ள சந்தன மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில், நேற்றிரவு புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த 4 சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதில், சில மரங்களை பாதியாக வெட்டியுள்ளனர். பூங்காவில் சந்தன மரங்கள் பாதியாக வெட்டி கிடப்பதை இன்று காலையில் வாக்கிங் சென்ற அப்பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தன மரம் வெட்டி கடத்திய மர்ம கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பூங்காவில் இருந்த சந்தன மரங்களை நள்ளிரவில் வெட்டி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.