சாம்சங் தொழிற்சாலையை கண்டித்து 13வது நாளாக தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், தொழிற்சங்க அங்கீகரிக்க போராடிய சிஐடியூ தொழிலாளர்களை குறிவைத்து, தொழிற்சாலை நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தொழிலாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்த, விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 31ம்தேதி நிர்வாக தலைவரை சந்திக்க முற்பட்ட காரணத்தை சுட்டிக்காட்டி, பணி நேரத்தில் பணியில் ஈடுபடாதது, தொழிற்சாலையில் ஒழுங்கீனமான முனையில் நடந்துக்கொண்டது உள்ளிட்ட காரணங்களுக்காக 3 தொழிலாளர்களை நிர்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நோட்டீஸ் கொடுத்தது.
இவ்வாறு, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு சேர்க்க வலியுறுத்தியும், தொழிலாளர்கள் மீது நிர்வாகம் மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும், தொடர்ந்து 13வது நாட்களாக சிஐடியூ தொழிலாளர்கள் வேலை புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த, விவகாரம் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் நேற்று 13வது நாளாக நடக்கும் உள்ளிருப்பு போராட்டம் தொடர்பாக சுமூக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, சாம்சங் தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களுடன் 500க்கும் மேற்பட்டோர் சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.