திருவண்ணாமலை மாவட்டத்தில் சம்பா பருவ சாகுபடி தொடங்குவதால் தட்டுப்பாடின்றி உரம் வழங்க வேண்டும்
*குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை : சம்பா பருவ நெல் சாகுபடி தொடங்கி விட்டதால் தட்டுப்பாடு இல்லாமல் உரம் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் கிழமையன்று வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திருவண்ணாமலை கோட்டத்துக்கு உட்பட்ட தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் திருவண்ணாமலை கல் நகர் பகுதியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் ஆர்டிஓ ராஜ்குமார் தலைமையில் நடந்தது.
அதில், உதவி கலெக்டர் (பயிற்சி) அம்ருதா, வேளாண் உதவி இயக்குநர்கள் முத்துராமன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், செங்கம் தாசில்தார்கள் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.அப்போது, விவசாயிகள் தரப்பில் தெரிவித்த குறைகள் மற்றும் கோரிக்கைகள் விபரம்:
திருவண்ணாமலை மாவட்டத்தில், இந்த ஆண்டு அதிகமான பரப்பளவில் சம்பா பருவ நெல் சாகுபடி நடைபெறுகிறது. எனவே, விவசாயிகளுக்கு தேவையான உரம் தட்டுப்பாடு இல்லாமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும்.
தனியார் ஒரு விற்பனை நிலையங்களில், அவசியமற்ற இடுபொருட்களை வாங்க வேண்டும் என நிர்பந்திப்பதை தடுக்க வேண்டும்.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அங்கு, நெல் மூட்டைகளை எடை போடுவதற்கான கூலி எனும் பெயரில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும்.
நூறு நாள் வேலை திட்டத்தில், அரசு நிர்ணயித்துள்ள தின ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும். நீர் வரத்து கால்வாய் மற்றும் பாசன கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும்.பருவ மழை காலத்தில் ஏரிகள் முழுமையாக நிரம்பும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நார்த்தாம்பூண்டி பகுதியில், குடிநீர் வசதிக்காக மேநீர் தொட்டி கட்ட அரசு அனுமதித்தும், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த அலுவலர்கள் அதை நிறைவேற்றாமல் திட்டமிட்டு அலைகழிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.