உப்பளத் தொழிலாளர்களை மேம்படுத்த திட்டம் உள்ளதா? திமுக எம்பி கனிமொழி கேள்வி
புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்வியில்,‘‘இந்தியாவில் இருக்கிற உப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உள்ள உப்பளத் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு, கடந்த ஐந்து ஆண்டுகளில் உப்பள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்களின் எண்ணிக்கை மாநில மற்றும் ஆண்டு வாரியாக எவ்வளவு, கல்விச் செலவுகள் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால்,
மேற்கூறிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியின் அளவை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் ஏதேனும் மதிப்பாய்வு செய்திருக்கிறதா, அப்படியானால், மானியத் தொகையை அதிகரிக்க அல்லது திட்டத்தின் எல்லையை விரிவுபடுத்த ஏதேனும் ஆலோசனைகள் ஒன்றிய அரசிடம் உள்ளதா, இல்லையென்றால் அதற்கான காரணங்கள் என்ன’’ என்று கேட்டிருந்தார்.
இதையடுத்து ஒன்றிய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த பதிலில், ‘‘இந்தியாவில் ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய எட்டு மாநிலங்கள் உப்பு உற்பத்தி மாநிலங்களாக இருக்கின்றன. இந்த மாநிலங்களில் உத்தேசமாக மதிப்பிடப்பட்டபடி குஜராத் மாநிலத்தில் 20ஆயிரத்து 500 உப்பளத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் 15ஆயிரத்து 500 உப்பளத் தொழிலாளர்கள், ராஜஸ்தானில் 15 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
ஆந்திராவில் 5500 உப்பளத் தொழிலாளர்களும் மற்ற மாநிலங்களில் 2ஆயிரம் அதற்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகளுக்கு உதவிகள் செய்யப்படுகிறது. குறிப்பாக கடந்த 2021-22ம் நிதியாண்டு முதல் 2024-25 வரையில் சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்று இருக்கிறார்கள். உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவும் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டம் இல்லை’’ என்றார்.