சேலத்துக்காரரின் ரெண்டு சம்பவம் டெல்லிக்கு திடீர் சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘மீண்டும் மலராத கட்சியுடன் கூட்டணி என பலாப்பழக்காரர் அறிவித்தால் மன்னர் மாவட்ட செயலாளர்கள் மாற்றுக்கட்சிக்கு தாவுவதற்கு ரெடியா இருக்காங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் ஒற்றை தலைமை பிரச்னை வெடித்த பிறகு மன்னர் மாவட்டத்தில் பலாப்பழக்காரர் தரப்புக்கு பெரிய ஆதரவு இல்லாமல் போய்விட்டது. முன்னாள் நகர்மன்ற தலைவர் மட்டும் அவருக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட செயலாளர் பதவியும் பெற்றுக்கொண்டாராம்.. அதுவும் இலைக்கட்சியை பலாப்பழக்காரர் எப்படியும் கைப்பற்றி விடுவார்.
அப்போது நமக்கு நல்ல முக்கியதுவம் கிடைக்கும் என நம்பி முடிவு எடுத்தேன் என்று பலமுறை தனது சகாக்களிடம் அவர் தெரிவித்தாராம்.. இதேபோல், தெற்கு மாவட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ ஒருவர் செயலாளராக இருக்கிறாராம்.. இந்நிலையில் சமீபத்தில் பலாப்பழக்காரர் தரப்பில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எந்த நம்பிக்கையும் கொடுக்கவில்லையாம்.. மலராத கட்சி கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தாங்க.. தற்போது, பலாப்பழக்காரரிடம் மலராத கட்சி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளிவருது..
அப்படி மீண்டும் மலராத கட்சியுடன் பலாப்பழக்காரர் கூட்டணி என சென்றால் நமக்கு மரியாதை இருக்காது.. இதனால் கண்டிப்பாக நாம் கட்சியை விட்டு வெளியேறி, மாற்றுக்கட்சிக்கு சென்று விடலாம் என முடிவு செய்துள்ளார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நாற்காலி பறக்கும் சம்பவம் நடக்கும் என்ற கிசுகிசுவால கதர் கட்சியின் மாநில தலைவர் யூத் கமிட்டி கூட்டத்தை புறக்கணித்து லாவகமாக பறந்து சென்ற கதை தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்துல கதர் கட்சியில் யூத் கமிட்டி நிர்வாகிகள் கடுப்பாகி இருக்கிறாங்களாம்..
துறைமுகம் இருக்கிற கடலோர கிராமங்களை அதிகம் கொண்ட அந்த மாவட்டத்தில உள்ள சட்டமன்ற தொகுதியில் இந்த முறை சீட் வாங்கி விட வேண்டும் என்று கதர் கட்சி யூத் கமிட்டி நிர்வாகி, தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.. தனது பலத்தை நிரூபிக்க இப்போதே களமிறங்கி போராட்டங்களையும் முன்னின்று நடத்துகிறாராம்.. சமீபத்துல டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தி சிறை போய்ட்டு வந்தாராம்..
கட்சி தலைமைக்கு தனது பலத்த காட்ட நினைச்சவரு, கடந்த இரு நாளுக்கு முன் கதர் கட்சியின் மாநில தலைவரு, மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது, தனது பகுதியிலும் யூத் கமிட்டி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, மண்டபம், ஸ்நாக்ஸ் வகைகள் எல்லாம் புக்கிங் செய்து ரெடியாக வைத்து இருக்காரு.. தலைவரும் கண்டிப்பாக வந்து விடுவேன். யூத் கூட்டம் தான் நமக்கு ரொம்ப முக்கியம் என கூறி இருக்காரு.. இதுபற்றி தெரிந்த யூத் கமிட்டி நிர்வாகிக்கு எதிரான சில மூத்த தலைகள், கதர் கட்சி தலைவரு காதுல ஏதோ கிசுகிசுத்து உள்ளார்களாம்..
அங்க போனா தேவையில்லாமல் நாற்காலி பறக்கும் சம்பவம் கூட நடக்கலாம் என்கிற ரீதியில் கிசுகிசுத்து பீதியை கிளப்பி விட்டு இருக்காங்க.. இதனால் மாவட்ட விசிட் வந்த அன்று கதர் கட்சி தலைவரு, எனக்கு இந்த முறை நேரம் இல்ல என யூத் கமிட்டி நிர்வாகிட்ட லாவகமாக தெரிவிச்சுட்டு, மாவட்ட தலைநகர்ல நடந்த மீட்டிங், விசேஷ நிகழ்ச்சியை மட்டும் முடிச்சிட்டு சிட்டாக பறந்துட்டாராம்.. இந்த விஷயத்தால யூத் ரொம்ப கடுப்பாகி இருக்காம்..
பழைய டெலிபோனாக மாறிய பின்னரும் கட்சியில யூத் வளர விட மாட்டேங்கிறாங்க என அந்த மூத்த நிர்வாகிகள் சிலரின் பெயரை குறிப்பிட்டு ஆதங்கப்பட்டு பேசி வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலைக்கட்சி தலைவர் மீது டெல்லிக்கு திடீரென சந்தேகம் ஏற்பட்டிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவர் ஒரு அரசியல் சாணக்கியன் என அவரது அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க.. அதற்கான காரணத்தை பட்டியலிட்டுக்கிட்டே போனாலும், குறிப்பா ஒன்றை மட்டும் விலாவாரியா சொல்றாங்க..
இப்படித்தாங்க இலைக்கட்சி தலைவரை பின்னுக்கு தள்ளிவிட்டு, நானும் கொங்குகாரருன்னு சொல்லி முன்னேற துடிச்சாரு மாஜி போலீஸ்காரரு.. ஆனால் அதற்கெல்லாம் இலைக்கட்சி தலைவர் அசைந்து கொடுக்கல.. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற மாஜி போலீஸ்காரர், கிணற்று தவளை, தற்குறி, கொலைகாரன் என வரிசையாக பட்டியலை படிச்சாரு.. இதையெல்லாம் காதில் வாங்கிய இலைக்கட்சி தலைவர், கூட்டணியை உதறி தள்ளியது பழைய கதை.. மாஜி போலீஸ்காரரை தலைவர் பதவியில் இருந்து தூக்கியே ஆகணுமுன்னு டெல்லியிடம் டிமாண்ட் பண்ணாரு..
அக்கட்சியின் ரெண்டாங்கட்ட தலைவர்களும் அதை செய்தே ஆகவேண்டும் என ஆமோதித்தாங்க.. இறுதியில் அவரோட பதவியை பறிச்சு, அரசியலில் எந்த இடத்திலும் இல்லாத வகையில் செய்தது இலைக்கட்சி தலைவரின் தந்திரமுன்னு நெஞ்சை நிமுத்துறாங்க.. அதிலும் அவரை இகழ்ந்த அதே வாயால, இலைக்கட்சி தலைவரை முதல்வர் ஆக்கியே தீருவோமுன்னு சொல்ல வச்சதுதான் அரசியல் ராஜதந்திரமுன்னு மெய்சிலிர்த்து சொல்றாங்க.. அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவர் மீது டெல்லிக்கு சந்தேகம் இருக்குதாம்..
இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான் என டிரம்ப் சொல்லிக்கிட்டு இருப்பதை போல, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என உள்துறை மந்திரி சொல்லிக்கிட்டே இருக்காராம்.. இதனை தான் இலைக்கட்சி தலைவரால் ஏற்றுக்கொள்ளவே முடியலையாம்... இதனால் தான், நாகாலாந்து கவர்னர் மறைவுக்கு கூட இலைக்கட்சி தலைவர் போகலையாம்.. மேலும் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது கொங்குகாரராம்..
அவரது வேட்புமனு தாக்கலுக்கு, இலைக்கட்சி தலைவரை டெல்லி அழைத்ததாம்.. அதற்கும் இலைக்கட்சி தலைவர் போகாமல் புறக்கணிச்சிட்டாராம்.. இந்த ரெண்டு சம்பவத்தை வைத்து, இலைக்கட்சி தலைவர் மீது டெல்லிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்காம்.. கூட்டணியை விட்டு வெளியே போயிடுவாரோ என நினைக்கிறாங்களாம்.. இந்த நிலையில் தான் இலைக்கட்சி தலைவர் மா.செ. கூட்டத்தை கூட்டியிருப்பதா கட்சிக்காரங்க சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.