சேலம் மேற்கு, வீரபாண்டி சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் சந்திப்பு: பேரவை தேர்தல் குறித்து அறிவுரை
சென்னை: திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில், “உடன்பிறப்பே வா” என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக பகுதி-நகர-ஒன்றிய-பேரூர் திமுக செயலாளர்களை ஒவ்வொருவரையும் தனித்தனியாக கடந்த ஜூன் 13ம் தேதி முதல் சந்தித்து வருகிறார். திமுக நிர்வாகிகள் ‘ஒன் டூ ஒன்’-ஆக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்கள் மனதில் உள்ளதை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சேலம் மாவட்டம் சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி, வீரபாண்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் தனித்தனியே சந்தித்து பேசினார். அப்போது சட்டசபை தேர்தலை எதிர்க்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், தொகுதி வெற்றி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் குறுகிய மாதமே உள்ளதால் தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும்.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்காக உழைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது நமது இலக்கு. அந்த இலக்கை எட்ட அனைவரும் உறுதியோடு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். மேலும் நிர்வாகிகளுக்கு புத்தகங்களை வழங்கினார்.