சேலத்துக்காரரின் பயனில்லாத பயணம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
‘‘கைமேல் பலன் கிடைக்குமா என தோழர்கள் கட்சி எதிர்பார்த்துக்கிட்டு இருக்காமே..’’ என்ன விஷயம் எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.‘‘கடைக்கோடி மாவட்டத்தில் கோலோச்சி வந்த போராட்டத்துக்கு பெயர் போன தோழர்கள் கட்சி, தற்போது தொய்வான நிலையில் இருக்கிறதாம்.. ஒரு காலத்துல இந்த மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் வரை தோழர்கள் ஆதிக்கம்தான் நிறைஞ்சி இருந்தது.. தொகுதி சீரமைப்பில் இவுங்களுக்கு பேவராக இருந்த ஒரு தொகுதி காலியானது.. அதன் பின்னர் தான் சரிவும் ஆரம்பிச்சு இருக்குது.. சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிச்சவங்க, தற்போது இந்த மாவட்டத்துல எந்த ெதாகுதியும் இல்லாமல் இருக்காங்களாம்.. இதனால தோழர்கள் அனைவரும் அப்செட் மூடில் உள்ளார்களாம்.. இதனால் வர தேர்தலில் கண்டிப்பாக ஒரு தொகுதியை நாம கேட்டு வாங்கணும் என்று தோழர்கள், மாநில தலைமைகிட்ட கறாராக கூறி இருக்கிறாங்களாம்.. அதுவும் மலையாள மக்கள் அதிகம் கொண்ட அந்த தொகுதியை தான் குறிவச்சு கேட்க முடிவு பண்ணி இருக்கிறார்களாம்.. ஆளுங்கட்சி கூட கூட்டணி என்பது உறுதியாகி விட்ட நிலையில், இந்த ஒரு தொகுதியை பெற்றே தீர வேண்டும் என காய்நகர்த்தி வருகிறார்களாம்.. இதை சொல்லி, கட்சியில் தூங்கிக் கொண்டிருந்த ஒவ்வொரு அமைப்புகளையும் தூசி தட்டி களப்பணிகளை ஆரம்பித்து உள்ளார்களாம்.. தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேட்பாளர்கள் பெயர்களையும் தோழர்கள் கட்சிக்காரங்க கணிக்க தொடங்கி விட்டார்களாம்.. இந்த முயற்சிக்கு கை மேல் பலன் கிடைக்குமா என்பதுதான் தோழர்கள் கட்சியின் மிகுந்த எதிர்பார்ப்பாக இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வெள்ளிமலை ரேஞ்ச் அதிகாரி நடவடிக்கையால் மலைவாசிகள் மனக்குமுறலில் இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குறிச்சி என முடியும் மாவட்டத்தில் மேற்கிலுள்ள மலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கிறார்களாம்.. அங்குள்ளவர்கள் பயன்படுத்தி வரும் நிலங்களுக்கு அரசு வன உரிமைச் சான்று வழங்குகிறதாம்.. இந்த சான்று மலைவாழ் மக்களுக்கு மட்டுமே கிடைத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகியும், தொகுதியின் பிரதிநிதியும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்களாம்.. ஆனால் இங்கு வெள்ளிமலை ரேஞ்சில் உள்ள வன அதிகாரியோ வன உரிமைச் சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களின் மனுக்களை அவ்வப்போது உதாசீனப்படுத்துவதாக பரவலாக புகார் எழுந்துள்ளதாம்.. நில அளவுக்கு ஏற்ப ‘ப’ விட்டமின்களை வாரிக் கொடுத்தால்தான் வேலையே நடக்குதாம்.. விட்டமின்கள் வராத மனுக்களில் பெரும்பாலானவை குப்பை தொட்டிக்கு செல்கிறதாம்.. இந்த அடாவடி வசூலால் பாதிப்புக்குள்ளான மலைவாசிகளோ யாரிடம் முறையிடுவது என தெரியாமல் புலம்பி வருகிறார்களாம்.. வெள்ளிமலை ரேஞ்ச் அதிகாரிமேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகிக்கு தொடர்ச்சியாக புகார் கடிதங்கள் எழுத முடிவெடுத்து இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரர் மீட்பு பயணத்தால் எந்த பயனுமில்லை என தொண்டர்கள் குமுறுகிறாங்களாமே எதுக்காம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி பார்ட்டி ஜெனரல் செகரட்ரி சேலத்துக்காரர் ஸ்டேட் முழுவதும் மீட்பு பயணத்தை நடத்தி வருகிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்றுவிட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக கட்சிக்கார்களை கண்டுகொள்ளாமல் இருந்த நிர்வாகிகள் தற்போது மீட்பு பயணத்தால் கீழ்மட்ட தொண்டர்களை சந்தித்துள்ளாங்களாம்.. அப்போது பலரும் தங்களின் அதிருப்தியை நேரடியாகவே மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்தாங்களாம்.. ஆட்சியில் இருந்த காலத்தில் கீழ்மட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மதிக்காமல் இருந்ததால், தற்போது பலரும் பல்வேறு கட்சிகளுக்கு தாவிவிட்டார்கள்.. இருக்கும் தொண்டர்களை தக்க வைக்க வேண்டும் என்றால் அனுசரிப்புடன் இருக்க வேண்டும். மீட்பு பயணத்தின்போது சேலத்துக்காரர் சென்ற இடங்களில் வைட்டமின் ப வைத்து மக்களை திரட்டிவிட்டாங்க.. ஆனால் கட்சி தொண்டர்களின் மனசை மட்டும் குளிர வைக்க முடியவில்லையாம்.. மீட்பு பயணத்தை நடத்தி மட்டும் என்ன பயன் என்று தொண்டர்கள் புலம்பி வர்றாங்க.. இலைக்கட்சியில் தலைவி இருந்தபோது கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்வார்.. புகார்கள் மீது உடனுக்கு உடன் நடவடிக்கை இருக்கும்.. மாவட்ட நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள் வரையும் பதவியில் இருந்து காலி செய்துவிடுவார்.. ஆனால் இப்போது சேலத்துக்காரர் அதுபோன்று கிடையாது.. அதனால் மா.செ.க்கள் மாவட்டத்துக்கே ராஜா போன்ற நினைப்பில் அரசியல் செய்றாங்க.. இப்படி இருந்து மீட்பு பயணத்தால் என்ன பயன் என தொண்டர்கள் மனச்சோர்வுடன் இருக்கிறாங்களாம்.. கடைமட்ட தொண்டர்களின் குரல்களுக்கு செவி சாய்த்தால் மட்டுமே கட்சி உயிர் பிழைக்கும்.. இல்லையெனில் வரும் தேர்தலுடன் இலைக்கட்சி நிலைமை வேறு மாதிரியாக மாறிடும் என்கின்றனர் உண்மை தொண்டர்கள்..’’ என்றார் விக்கியானந்தா.‘‘புதுச்சேரியில் செல்லப் பிராணிகளுக்காக நடந்த விநோத பேரணி பற்றிதான் ஒரே முணுமுணுப்பாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாடு முழுவதும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிகழ்வாக தெருநாய் தொல்லை மாறி இருக்கிறதாம்.. பகலில் தனியாக நடந்து சென்றவர்களை ஆங்காங்கே தெரு நாய்கள் ஒன்றுகூடி பதம் பார்த்த கொடூர காட்சிகள் வலைதளத்தில் வைரலாக நீதி கேட்டு ஒருதரப்பு நீதிமன்ற படிக்கட்டு ஏறியதாம்.. சில கடுமையான நடவடிக்கைகளை நீதிமன்றம் முன்னெடுக்க, பொதுமக்களோ சற்று ஆறுதல் அடைந்தார்களாம்.. ஆனால் விநோதத்துக்கு பெயர்போன புதுச்சேரியிலோ, விலங்குகளுக்கு ஆதரவான யூனியனோ குரல் இல்லாதவர்களுக்கான குரல் எனும் வித்தியாசமான பேரணியை நடத்தி உள்ளதாம்.. வாயில்லா பிராணிகளுக்கு நாம்தான் பாதுகாப்பு என்று லாரியில செல்லப் பிராணிகளை ஏற்றி கோரிக்கை அட்டைகளை பிடித்தபடி நல அமைப்பினர் பங்கேற்றார்களாம்.. இதை வேடிக்கை பார்த்து சிரித்தபடி சென்ற பயணிகளோ அப்போது மனிதர்களுக்கு யார்தான் பாதுகாப்பு என்று முணுமுணுப்பதை கேட்க முடிந்ததாம்.. இந்த சிறப்பு பேரணி பற்றிதான் புதுச்சேரி முழுக்க பேச்சு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.