சேலம் பெரியார் பல்கலையில் தமிழ்த்துறை தலைவர் அதிரடி சஸ்பெண்ட்: நிர்வாகக் குழுவினர் நடவடிக்கை
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக இருந்தவர் பெரியசாமி. இவர் போலி அனுபவ சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தது, நிர்வாகத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். இதனையடுத்து சமீபத்தில் அவரது துறைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அதே சமயம், தங்களை முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விடாமல் தடுத்ததாக, தமிழ்த்துறையில் பி.எச்டி., ஆய்வு மேற்கொண்ட மாணவர்கள் புகார் அளித்தனர். அதில், 19 முனைவர் பட்ட ஆய்வாளர்களை பயில விடாமல் செய்தது, சாதி பெயரைச் சொல்லி மாணவர்களை இழிவுபடுத்தியது, அலுவல் நிலை பணியாளர்களைத் தரக்குறைவாக பேசியது, பேராசிரியர்களை நாகரிகமற்ற முறையில் திட்டியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர்.
எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனையடுத்து, இப்புகார் குறித்து விசாரணை நடத்த, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் மணியன் தலைமையில், 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், புகார் தெரிவித்தவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்தனர். இதில், பேராசிரியர் பெரியசாமி மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குழு பரிந்துரையின் அடிப்படையில் பேராசிரியர் பெரியசாமியை சஸ்பெண்ட் செய்து, பல்கலைக்கழக நிர்வாகக்குழு உத்தரவிட்டுள்ளது.