துணைவேந்தர் பதவி நீட்டிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்; சேலம் பெரியார் பல்கலைக்கழக பணியாளர்கள் 77 பேருக்கு நோட்டீஸ்: பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டு
இந்த நோட்டீசை பதிவாளர் (பொ) விஸ்வநாதமூர்த்தி, பணியாளர்களுக்கு அனுப்பியுள்ளார். அதில், ‘காரணம் காண்பிக்க தவறினாலோ அல்லது தங்களால் கூறப்படும் காரணம் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு திருப்திகரமாக இல்லை என்றாலோ, தங்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ், பல்கலைக்கழக நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் கூறியதாவது: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல், முறைகேடுகளுக்கு எதிராகவும், துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராகவும், தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறோம். அத்துடன் தமிழ்நாடு அரசின் ஆணையை அமல்படுத்த கோரி, பணி நேரத்திற்கு முன்பும், பின்பும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போது, தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வண்ணம், துணைவேந்தர் ஜெகநாதன் ஆணையின் பேரில், பொறுப்பு பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி 77 தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அறிவிப்பு மெமோ வழங்கி உள்ளார்.
இது ஜனநாயக விரோத அடக்குமுறை ஆகும். தொழிலாளர்களின் ரத்தம் குடிக்கத் துடிக்கும் துணைவேந்தரை சட்டப்படியும், சங்க ரீதியாகவும் எதிர்கொள்வோம். எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதுடன், துணைவேந்தருக்கு எதிராக நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் முடுக்கிவிட வேண்டும். அத்துடன் புறவாசல் வழியாக ஓராண்டு பணி நீட்டிப்பு பெற்று அரசுக்கும், ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் எதிரான துணைவேந்தரின் நடவடிக்கைகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.