சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு சார் பதிவாளர், துணை தாசில்தார் உள்பட 10 பேர் மீது மோசடி வழக்கு: மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சேலம்: சேலத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளர், துணை தாசில்தார், விஏஓ உள்ளிட்ட 10 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை அருகே மெய்யனூரை சேர்ந்தவர் கோவிந்தன் (73). இவர் கடந்த 20 நாட்களுக்கு முன், சேலம் மாவட்ட எஸ்பி கௌதம் கோயலிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில், தனது தாய் கந்தாயி பெயரில், இடங்கணசாலை கிராமத்தில் உள்ள 13.75 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம், மகுடஞ்சாவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் சகோதரர் கந்தசாமி, அவரது மகன்கள் மாணிக்கம், அருணாசலம் ஆகியோர் தான செட்டில்மென்ட் கிரையம் செய்துள்ளனர். இந்த பத்திரப்பதிவுக்கு, தனது தாய் கந்தாயி பெயரில் போலியாக இறப்புச்சான்று, வாரிசு சான்று ஆகியவை பெறப்பட்டு, அதற்கு உடந்தையாக சார்பதிவாளர், துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இருந்துள்ளனர் எனக் கூறியிருந்தார்.
இப்புகார் பற்றி விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கந்தாயி பெயரில் போலியாக இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் உருவாக்கி, 13.75 சென்ட் நிலத்தை 2022ல் பத்திரப்பதிவு செய்திருப்பது உறுதியானது.
இதையடுத்து, இம்மோசடியில் ஈடுபட்ட கந்தசாமி (இறந்து விட்டார்), அவரது மகன்கள் மாணிக்கம், அருணாசலம், உடந்தையாக இருந்த ராஜா, இடங்கணசாலை கிராம நிர்வாக அலுவலர் கோபால், சங்ககிரி துணை தாசில்தார் ஜெயக்குமார், பத்திர எழுத்தர் செந்தில்குமார், அப்போதைய மகுடஞ்சாவடி சார் பதிவாளர் கோவிந்தசாமி உள்பட 10 பேர் மீது கூட்டுசதி, போலி ஆவணம் தயாரித்து, பதிவு செய்தல் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.