சேலம் மத்திய சிறையில் பரபரப்பு கைதி ஆசனவாயில் பதுக்கிய செல்போன், கஞ்சா சிக்கியது: ‘இனிமா’ கொடுத்து வெளியே எடுத்த போலீஸ்
சேலம்: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (35). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் இருக்கிறது. திருட்டு வழக்கில் தீவட்டிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் மணிகண்டனை சேலம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். வழக்கு நடவடிக்கைகள் முடிந்தபின் அங்கு மணிகண்டன் கழிவறைக்கு சென்றுவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை சிறைக்கு பாதுகாப்புடன் கொண்டு சென்றனர். அன்று மாலை 3 மணிக்கு சிறையின் நுழைவு வாயிலில் மணிகண்டனை ஆடைகளை நன்றாக சோதனை செய்தனர். அப்போது, மெட்டல் டிடெக்டர் கருவியில் சத்தம் வந்தது. விசாரணையில், அவர் செல்போன், கஞ்சாவை ஆசனவாய் வழியாக பதுக்கியுள்ளதாக கூறினார்.
இதையடுத்து அவரை கழிவறைக்கு அழைத்து சென்று, வழக்கமான முறையில் கஞ்சா பொட்டலத்தை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர். ஆனால், எந்த பொருளும் வெளிவராத நிலையில் ரத்தகசிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, பின்பகுதியின் உள்ளே கருப்பாக 3 உருண்டை இருந்தது. இதையடுத்து டாக்டர்கள் அறிவுரையின்படி இனிமா கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் இனிமா வேலை செய்ய தொடங்கியது. கொஞ்ச நேரத்தில் 2 உருண்டை வெளியே வந்து விழுந்தது. தொடர் நடவடிக்கையின் காரணமாக நேற்று காலை இன்னொரு உருண்டையும் விழுந்தது. அதில் சிறிய வகையிலான 1 செல்போன், மற்ற 2 உருண்டையில் 45 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து, அவரிடம் கஞ்சா கொடுத்தது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.