சேலம் அருகே பயங்கரம் அன்புமணி ஆதரவாளர்கள் தாக்குதல் உயிர் தப்பிய ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ: 6கார்களின் கண்ணாடிகள் உடைப்பு ; கல்வீச்சு; 9 பேர் படுகாயம்
வாழப்பாடி: சேலம் அருகே ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் காரை வழிமறித்து அன்புமணி தரப்பினர் தாக்குதல் நடத்தினர். அப்போது கார்களை வழிமறித்து கண்ணாடியை உடைத்தும் கற்களை வீசியும், உருட்டுக்கட்டையால் இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். அருள் எம்எல்ஏ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாமகவில் தந்தை, மகன் மோதலையடுத்து ராமதாஸ் தரப்பினரும், அன்புமணி தரப்பினரும் இருகோஷ்டிகளாக பிரிந்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
பாமக எம்எல்ஏக்களை பொறுத்தவரை சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள், பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி ஆகியோர் ராமதாஸ் ஆதரவாளர்களாக உள்ளனர். இதில் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளுக்கு மாநில இணைப்பொதுச்செயலாளர் பொறுப்பை ராமதாஸ் வழங்கியுள்ளார். இதையடுத்து அன்புமணி ஆதரவாளர்கள் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த வாரம் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அன்புமணி, அருள் எம்எல்ஏவை சாக்கடை என்று விமர்சனம் செய்ததும் இருதரப்பினர் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் சேலம் அருகே அருள் எம்எல்ஏவை குறிவைத்து அன்புமணி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதும், இதையடுத்து இரு தரப்பினரும் பலமாக மோதிக்கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடுகத்தம்பட்டியை சேர்ந்தவர் சத்யராஜ் (45). இவர், ராமதாஸ் அணி பாமகவின் பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது தந்தை தர்மராஜ் (70) நேற்று முன்தினம்மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது.
இதில் கலந்து ெகாள்ள அருள் எம்எல்ஏ சேலத்தில் இருந்து சென்றுவிட்டு காரில் திரும்பி கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் செல்வம் (சேலம் வடக்கு), நடராஜ் (கிழக்கு), ஒன்றிய செயலாளர்கள் ஆனந்த், வாழப்பாடி பச்சமுத்து உள்பட நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்ட கார்களில் வந்தனர். வடுகத்தம்பட்டி பகுதி தரைப்பாலம் அருகே கார் சென்றபோது 30க்கும் மேற்பட்டோர் கும்பல் காரை வழிமறித்தது. அதில், அன்புமணி அணியை சேர்ந்த சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர். அவர்கள் திடீரென தகராறில் ஈடுபட்டு கார் கண்ணாடிகளை உடைத்தனர்.
மேலும் கற்களையும் வீச ஆரம்பித்தனர். இதில் 6 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. காரில் இருந்து இறங்காததால் அருள் எம்எல்ஏ அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆத்திரமடைந்த அருள் எம்எல்ஏ தரப்பு நிர்வாகிகளும் பதிலடி தாக்குதல் நடத்தினர். உருட்டுக்கட்டைகள், இரும்புராடுகளால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் வாழப்பாடி, ஏத்தாப்பூர் போலீசார் அங்கு வந்தனர். தாக்குதலில் காயமடைந்த இரு தரப்பினரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தாக்குதலில் அருள் எம்எல்ஏ உடன் இருந்த கட்சி நிர்வாகிகளான சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் நடராஜ், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், உழவர் பேரியக்க ஒன்றிய செயலாளர் ஸ்ரீரங்கம், ஒன்றிய செயலாளர் ஆனந்த், இளைஞரணி நிர்வாகிகள் விஜி (எ) விஜயகுமார், மணிகண்டன், கோவிந்தராஜன், கஜேந்திரன், லோகேஷ் ஆகிய 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனைக்கு அருள் எம்எல்ஏ சென்று, காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் தெரிவித்தார். அன்புமணி ஆதரவாளர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மோதல் குறித்து இருதரப்பினரும் சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* அன்புமணி மீது வழக்கு ராமதாஸ் தரப்பில் ஐகோர்ட்டில் முறையீடு
சேலத்தில் பாமக எம்எல்ஏ அருள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று மாலை அருள் எம்எல்ஏ தரப்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது. காரில் வந்து கொண்டிருந்த போது தன் மீது தாக்குதல் நடத்தி தன்னுடைய காரை சேதப்படுத்தி தாக்குதல் நடத்திய அன்புமணி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
* காரில் இருந்து இறங்காததால் தப்பித்தேன் அன்புமணி கொல்ல சொன்னாருன்னு கத்தி எடுத்து என்னை குத்த வந்தாங்க...‘ஏ1’ அவருதான்; அருள் எம்எல்ஏ பரபரப்பு பேட்டி
தாக்குதல் குறித்து அருள் எம்எல்ஏ நிருபர்களிடம் கூறியதாவது: ஒன்றிய செயலாளரின் தந்தை இறந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்கவிட்டு 10 கார்களில் திரும்பி வந்து கொண்டிருந்தோம். வாழப்பாடி அருகே அன்புமணியால் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 25 பேர், திடீரென எங்களது கார்களை மறித்து தாக்குதலில் ஈடுபட்டனர். கல்லால் அடித்தார்கள். உருட்டுக்கட்டை, இரும்பு பைப்புகள், பெரிய கத்தி ஆகியவற்றை கொண்டு தாக்கினர். மாவட்ட செயலாளர் நடராஜன் உள்ளிட்டோருக்கு பலத்த அடி விழுந்தது.
நான் காரில் இருந் தபோது என்னை நோக்கி சடையப்பன் என்பவர் உள்பட 2 பேர் கத்தி, இரும்பு பைப்புடன் வேகமாக வந்தது, உன்னை அன்புமணி கொல்ல சொல்லிவிட்டார், அதனால் கொன்றுவிடுவோம் எனக்கூறியபடி தாக்க வந்தனர். அப்போது என்னுடன் இருந்த நிர்வாகிகள் தடுத்தனர். அவர்களுக்கு வெட்டு விழுந்தது. என் மீதான இந்த கொலை வெறி தாக்குதலுக்கு அன்புமணி தான் காரணம். அவர் சொல்லி தான், என்னை கொல்ல முயன்றுள்ளனர். காரை விட்டு இறங்காததால் தப்பித்தேன். இத்தாக்குதலில் முதல் குற்றவாளி அன்புமணி. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஜெயபிரகாஷ் உள்ளிட்ட தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். அன்புமணி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு அருள் எம்எல்ஏ கூறினார்.
* விரைவில் அன்புமணியின் ரகசியம்
‘பாமக தலைவர் ராமதாஸ், எதுவும் தெரியாமல் வீட்டில் இருந்த அன்புமணியை 36 வயதில் ஒன்றிய அமைச்சராக்கினார். ஆனால், பெற்ற தந்தையையே கொலை செய்ய முயன்ற கொடூர சிந்தனை கொண்டவர் அன்புமணி. அவர் என்னை விட்டு வைப்பாரா? சேலத்தில் நடந்த கூட்டத்தில் அவர் முன்பு, ஒருவர் என்னை வெட்டி கொல்ல வேண்டும் என பேசுகிறார். அதனை சிரித்தபடி கேட்டுக்கொண்டிருக்கிறார். என்றைக்கு வேண்டுமானாலும் சாகத்தான் போகிறேன். அது அன்புமணியின் கையால் செத்தா, செத்து போகிறேன். ஆரம்ப காலத்தில், அன்புமணியுடன் கிராமம் கிராமமாக சென்று கொடியேற்றியவர்கள், நானும், அறிவுசெல்வனும் தான். அந்த அறிவுசெல்வனை கொலை செய்துவிட்டார்கள். அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை வெளியிடுவேன். அன்புமணி பற்றிய எல்லா உண்மைகளும் எனக்கு தெரியும். அனைத்தையும் விரைவில் சொல்வேன்,’ என அருள் எம்எல்ஏ கூறினார்.
* தாக்குதலுக்கு காரணம் என்ன?
‘சேலத்தில் பாமக தலைவர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழுவில் கூட்டம் அதிகளவு கூடியது. பெண்கள் ஏராளமானோர் வந்திருந்தார்கள். வன்னியர் சங்கத்தை ஆரம்பித்தபோது எப்படி ஆதரவு இருந்ததோ, அதுபோல் ராமதாசை பார்க்க திரண்டு வந்தார்கள். இந்த பொதுக்குழு கூட்டத்தை பார்த்து அன்புமணியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த அளவுக்கு கூட்டத்தை கூட்டியது, அருள் தான் எனக்கூறி, என்னை ஒழிக்க முடிவு செய்துவிட்டார். அதனால் தான், அவரது ஆதரவாளரான ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ரவுடிகளை ஏவி விட்டு கொலை வெறி தாக்குதலை நடத்தியுள்ளார்’ என அருள் எம்எல்ஏ கூறினார்.
* இணைய மாட்டேன் தொலைத்து விடுவேன்: அன்புமணி ஆவேசம்
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நேற்று நடந்த பாமக பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், கடந்த 28 ஆண்டுகளாக பென்னாகரம் தொகுதிக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு அரசியல் வாழ்வில் அரசியலை கற்றுக் கொடுத்தவர்கள் பென்னாகரம் தொகுதி மக்கள். பாமக தொண்டர்களை யாராவது மிரட்டினால் அவர்களை தொலைத்து விடுவேன். தொடர்ந்து விரட்டினால் தொகுதிக்கு உள்ளே வர விட மாட்டேன். ஐயாவிடமிருந்து (ராமதாஸ்) என்னை பிரித்து விட்டனர். அவர் சமூக சீர்திருத்தவாதி. அவரின் மனதை மாற்றிய துரோகிகள், தீய சக்திகள் இருக்கும் வரை அந்த இடத்திற்கு நான் செல்ல மாட்டேன்’ என்றார்.
* குண்டர் சட்டத்தில் அருள் எம்எல்ஏவை கைது செய்யுங்கள் வக்கீல் பாலு வலியுறுத்தல்
பாமக அன்புமணி தரப்பு செய்தித் தொடர்பாளர் கே.பாலு வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த ஏத்தாப்பூர், வடுக்கத்தப்பட்டி மந்தைக்குட்டையில் பாமக நிர்வாகி ஒருவரின் தந்தை காலமான நிலையில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்த சேலம் அருளும் அவரது கூட்டாளிகளும் சென்றுள்ளனர். அப்போது பாமகவை சேர்ந்த ராஜேஷ் குமாருக்கு சொந்தமான கொட்டைப் பாக்கு காயவைக்கும் களத்தில் அருளும், அவரது கூட்டாளிகளும் அனுமதியின்றி காரை நிறுத்தியுள்ளனர். இதில் அங்கு காயவைக்கப்பட்டிருந்த பாக்குகள் சேதமடைந்ததால், வாகனங்களை அங்கு நிறுத்தக்கூடாது என்று ராஜேஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உடனே சேலம் அருள், ராஜேஷ்குமாரைத் தாக்கும்படி தன்னுடன் வந்த கும்பலை தூண்டியுள்ளார். அப்போது அங்கு இருந்த காவல்துறையினர், அருள் கும்பலைத் தடுப்பதற்கு பதிலாக ராஜேஷ்குமாரை தடுத்து அழைத்துச் சென்றுள்ளனர். காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே, மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் ராஜேஷ்குமாரை சேலம் அருள் கும்பல் தாக்கியுள்ளது. இது குறித்த தகவல் கிடைத்தவுடன் ராஜேஷ்குமாரை மீட்டு மருத்துவம் அளிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பாமக நிர்வாகிகள் அங்கு விரைந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்து சேலம் சென்று கொண்டிருந்த அருள் கும்பல், வடுகத்தம்பட்டி தரைப்பாலம் என்ற இடத்தில் செந்தில் குமார் என்பவர் மீது காரை மோதி படுகொலை செய்ய முயன்றுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொடிய ஆயுதங்களுடன் அருள் கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் வஜ்ரா காசி உள்ளிட்ட மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர். தொடர்ச்சியாக வன்முறை வெறியாட்டங்களை நடத்தி வரும் சேலம் அருளையும், அவரது கூட்டாளிகளையும் காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். அருளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
* அமைதியாக உள்ள தமிழகத்தில் வன்முறையை தூண்டுகிறார் அன்புமணி கும்பலை குண்டாசில் போடுங்கள்: ராமதாஸ் அறிக்கை
பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பாமக மாநில இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அருளை கொல்லும் நோக்கத்தோடு ஜனநாயகத்திற்கு எதிராக நடந்த இந்த தாக்குதல் நிகழ்வு கடுமையான கண்டனத்துக்குரியது. அன்புமணியின் தூண்டுதலின் பேரில் பல மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மோதல்கள் நடந்து வருகிறது. அமைதி பூங்காவாக உள்ள தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பா.ம.க.வினர் மீதான தாக்குதலுக்கும், கலவரத்திற்கும் காரணம் அன்புமணியின் நடைபயணம் தான்.
என்னுடன் இருக்கும் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்களை தம்பக்கம் இழுக்க பல்வேறு வலைகளை வீசியும், ஆசை வார்த்தைகள் கூறியும் இயலாமல் போன விரக்தியின் வெளிப்பாடாக தற்போது கட்சி நிர்வாகிகள் மீது ரவுடிகளை வைத்து தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். அருள் மீதான இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர்களாக செயல்பட்ட அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அருள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உதவி ஆய்வாளர் தலைமையில் துப்பாக்கி ஏந்திய குழு காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம். அன்புமணியே திட்டமிட்டு, தூண்டுதலை செய்ததே இந்த சம்பவத்திற்கு காரணம். இவ்வாறு திட்டமிட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதமாக, என்னுடன் உள்ள பாமகவினரை தாக்க வேண்டும் என்று சதி திட்டத்தோடு செயல்படும் அன்புமணியின் கும்பலை தடை செய்து, அந்த சட்ட விரோத கும்பலில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்திட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.