சேலத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த தனியார் மருத்துவமனைக்கு சீல்!!
சேலம்: சேலத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தெரிவிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் இன்று விரைந்து சென்ற அதிகாரிகள் மருத்துவமனையில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, மருத்துவமனையில் கர்ப்பிணிகளின் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை ஸ்கேன் செய்து கண்டறிந்து தெரிவித்து வந்தது உறுதியானது. இதையடுத்து, டாக்டர் கண்ணன் அவரது மனைவி ஜோதி, மேகநாதன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், மருத்துவமனைக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.