சேலம்-ஈரோடு புதிய மின்சார ரயில் சேவை தொடக்கம்: மேலும் 3 ஸ்டேஷனில் நிற்க பயணிகள் கோரிக்கை
சேலம்: சேலம்-ஈரோடு புதிய மின்சார ரயில் இயக்கம் இன்று காலை துவங்கியது. வீரபாண்டி, மாவேலிப்பாளையம், ஆனங்கூர் ஸ்டேஷன்களில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் ரயில்வே கோட்டத்தின் தலைமை ரயில்வே ஸ்டேஷனான சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு புதிய ரயில் சேவைகளை துவங்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதில், சேலம்-ஈரோடு இடையே வாரத்திற்கு 6 நாட்கள் இயங்கும் வகையில் புதிய மின்சார ரயில் இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இதன்படி, சேலம்-ஈரோடு மெமு பாசஞ்சர் ரயில் (66621) சேவை இருமார்க்கத்திலும் இன்று துவங்கியது. இன்று (24ம் தேதி) காலை 6.15 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சேலம்-ஈரோடு மெமு பாசஞ்சர் ரயில் புறப்பட்டுச் சென்றது.சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன்நிலைய மேலாளர் கோபேஸ் காந்த், நிலைய மேலாளர் (வணிகம்) வேல்முருகன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். வாராத்திற்கு 6 நாட்கள் (வியாழன் தவிர) இந்த புதிய ரயில் இயக்கப்படுகிறது. சேலம் ஜங்ஷனில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மகுடஞ்சாவடிக்கு காலை 6.29க்கும், சங்ககிரிக்கு காலை 6.49க்கும், காவேரி ஸ்டேஷனுக்கு காலை 7.04க்கும் சென்று, ஈரோட்டிற்கு காலை 7.25 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், ஈரோடு-சேலம் மெமு பாசஞ்சர் ரயில் (66622) வாராத்திற்கு 6 நாட்கள் (வியாழன் தவிர) இயக்கப்படுகிறது. இன்று முதல் ஈரோட்டில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, காவேரிக்கு இரவு 7.38க்கும், சங்ககிரிக்கு இரவு 7.54க்கும், மகுடஞ்சாவடிக்கு இரவு 8.09க்கும் வந்து, சேலத்திற்கு இரவு 8.45 மணிக்கு வந்தடைகிறது.
சேலம்-ஈரோடு மார்க்கத்தில் உள்ள வீரபாண்டி ரோடு, மாவேலிப்பாளையம், ஆனங்கூர் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களிலும் இந்த ரயில், நின்று செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வழியே ஏற்கனவே இயங்கிய பாசஞ்சர் ரயில்கள், இந்த ஸ்டேஷன்களில் நின்று சென்றவை தான். அதாவது சேலம்-கோவை பாசஞ்சர் இயக்கப்பட்டபோது, இந்த ரயில்வே ஸ்டேஷனில் நின்று சென்றது. அதன் அடிப்படையில் இந்த 3 ஸ்டேஷன்களிலும் சேலம்-ஈரோடு மெமு ரயில் நிற்க வேண்டும் என பயணிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு கோரிக்கை மனுக்களையும் அனுப்பி வைத்துள்ளனர்.