சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
சேலம் : சேலம் கலெக்டர் அலுவலகம் முன், தனியார் நிறுவனத்தின் நெருக்கடியால் உடலில் பெட்ரோல் ஊற்றி இளம்பெண் தீக்குளிக்க முயன்றார். அவரை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் வந்து, கலெக்டர் பிருந்தாதேவியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார். இதில், சங்ககிரி அருகே உள்ள ஏகாபுரம் ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மனைவி சுமதி (27) என்பவர் தனது 5 வயது மகளுடன் மனு அளிக்க வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் பகுதிக்கு வந்தவுடன், திடீரென பையில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார், அவரை மீட்டனர். தீயணைப்பு வீரர்கள், அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில், தனது கணவர் தியாகராஜன் இருதய நோயாளி. எங்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். இச்சூழலில் தனியார் நிதி நிறுவனத்திடம் தறிக்கூடம் அமைக்க ரூ.2.50 லட்சம் கடன் வாங்கி இருந்தோம். அதில், ரூ.1 லட்சத்தை அடைத்துவிட்டோம்.
தற்போது நிதி நிறுவன ஊழியர்கள், மீதம் உள்ள பணத்தை கேட்டு வீட்டிற்கு வந்து கடும் நெருக்கடி கொடுக்கின்றனர். கணவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், குடும்பம் நடத்த வருவாய் இன்றி தவித்து வருகிறோம். நிதி நிறுவனத்தினரின் நெருக்கடி தாங்காமல், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என கண்ணீருடன் கதறியபடி கூறினார்.
பின்னர் சுமதியை சேலம் டவுன் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தனியார் நிறுவனத்தின் மீது புகார் கூறி இளம்பெண் தீக்குளிக்க முயன்ற இச்சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.