சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு வீட்டை விட்டு மகன் துரத்தியதால் முதியவர் தீக்குளிக்க முயற்சி
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (63) விவசாயி. இவர் நேற்று மதியம் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். நுழைவுவாயில் பகுதிக்கு வந்த அவர், திடீரென மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் தீயணைப்பு வீரர்கள், அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். பிறகு தீக்குளிக்க முயன்ற பழனிசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ‘தனக்கு 2 மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன், 2 மகள்களும், 2வது மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர். சமீபத்தில் எனது முதல் மனைவியின் மகன், எனக்கு சொந்தமான வீட்டை விற்றுவிட்டு, என்னை துரத்தி அடித்து விட்டார்.
இதனால், எங்கு செல்வதென்று தெரியவில்லை. அந்த வீட்டை மீட்டு தர வேண்டும். அத்துடன் மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்வதற்கு வழியில்லாததால், தற்கொலை செய்து கொள்வதற்காக வந்தேன்,’ எனக்கூறினார். இதையடுத்து பழனிசாமியை சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்தனர்.