சேலம் மாநகர அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சகட்டம்: சட்டையை பிடித்து அடித்துக் கொண்ட நிர்வாகிகள்
சேலம்: சேலம் மாநகர அதிமுகவில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் 2 பகுதி செயலாளர்கள் சட்டையை பிடித்து அடித்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகர மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாள்தோறும் மோதல்கள் வெடித்து வருகிறது. மாநகர மாவட்ட செயலாளராக இருந்த வெங்கடாசலம் மாற்றப்பட்டு, மாநகர செயலாளராக பாலு நியமிக்கப்பட்டார். வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் என புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள சூழ்நிலையில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மாநகரத்தை பொருத்தவரையில், சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு என 3 ெதாகுதிகள் உள்ளது. இதில் மாவட்ட செயலாளராக இருக்கும் பாலுவுக்கு மேற்கு தொகுதி வழங்கப்படும் எனவும், வடக்கு தொகுதியை கூட்டணிக்கு விட்டுக்கொடுக்கப்படும் எனவும் கட்சியினர் கூறி வருகின்றனர். தெற்கு தொகுதிக்கு தான் கடும் போட்டி இருந்து வருகிறது. இதில் கடந்த தீபாவளி நேரத்தில் சேலம் புறநகர் பகுதியை சேர்ந்த வினோத் என்பவர், தெற்கு தொகுதியை சேர்ந்த 300 நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை, இனிப்பு வழங்கி, எனக்கு தான் சீட் கிடைக்கும் என உறுதியாக கூறிவிட்டார்.
புறநகர் மாவட்டத்தில் இருப்பவருக்கு தெற்கு தொகுதியில் எப்படி சீட் கொடுக்க முடியும்? மற்றவர்களுக்கு உழைக்க தான் நாங்கள் இருக்கிறோமா? என கேள்வி எழுப்பிய தெற்கு தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கும் 10க்கும் மேற்பட்ட மூத்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநகர அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாநகர அதிமுக அலுவலகத்தில் பகுதி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டின் அருகில் நிர்வாகிகள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் சிவக்குமாருக்கும், சூரமங்கலம் பகுதி செயலாளர் மாரியப்பனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்நேரத்தில் வீட்டில் இருந்த எடப்பாடி பழனிசாமி, சென்னை புறப்படுவதற்காக வெளியே வந்தார். அப்போது தகராறு நிறுத்தப்பட்டது. பின்னர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்திற்கு சென்றனர்.
அப்போது கோபத்தில் இருந்த பகுதி செயலாளர் மாரியப்பன், சிவக்குமாரை பார்த்து ஆபாசமாக பேசியதுடன் அடிக்க பாய்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிவக்குமாரும் அதற்கு தயாரானார். ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து அடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மற்ற பகுதி செயலாளர்கள் இருவரையும் விலக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.