ரெடி டூ ஈட் உணவு விற்பனையில் அசத்தும் கண்மணி தனசேகர்!
தொழிலில் புதிய முயற்சிகள் ஊக்குவிக்க படவேண்டும். அதே நேரத்தில் பலரும் பயன்பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் பாக்கெட்டினை பிரித்ததும் அப்படியே சாப்பிட்டு விட கூடிய உணவு வகைகளை ப்ரெஷ்ஷாக சமைத்து நவீன வடிவிலான புதிய மற்றும் உயரிய தொழில்நுட்பம் வழியாக பேக்கிங் செய்து விற்பனை செய்து அசத்தி வருகிறார் பெண் தொழில்முனைவோர் கண்மணி தனசேகர். தமிழகத்தில் தூத்துக்குடி வெள்ள நிவாரண பணிக்காக 1000 பாக்கெட் உணவுகள் ஹெலிகாப்டர் மூலமாக வழங்கி அரசிடம் பாராட்டுகளை பெற்றவர் கண்மணி. பெண்களின் சமையல் பளுவினை குறைக்க அவர்கள் வேலையினை சுலபமாக்க தான் எங்களது ரெடி டூ ஈட் உணவுகளை தயாரித்து விற்பனை செய்ய விரும்பினேன். அடிக்கடி பயணிப்பவர்களுக்கும், பேச்சுலர்ஸ் மற்றும் வயதானவர்கள் பலருக்கும் உபயோகமாக இருக்கும் எங்களது ரெடி டூ ஈட் உணவு வகைகள். தற்போது பல இடங்களிலும் இதற்கான வரவேற்புகள் எங்களுக்கு நிறைய இருக்கிறது. எங்களது ரெடி டூ ஈட் உணவுகள் பெண்களின் தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஒன்று என்கிறார் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் சாதனையாளராகவும் , ஒரு வெற்றி பெற்ற பெண் தொழிலதிபராகவும் கலக்கி வரும் கண்மணி தனசேகர். தனது கணவர் தனசேகர் இவருக்கு பெரிதும் பக்கபலமாக இருக்கிறார் என்றால் அது மிகையில்லை. பெண் சாதனையாளர் விருது, மெரிடோரியஸ் விருது , எக்ஸலன்ஸ் இன் எஸூகேஷன்ஸ் விருது, அஷ்டலஷ்மி விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார் இந்த பன்முக திறமையாளர் கண்மணி. இவரது பல்வேறு திறமை களுக்காக UN ல் இவரது தயாரிப்புகள் குறித்து என்னை பேச அழைத்துள்ளார்கள் என பெருமிதத்துடன் சொல்கிறார். ரெடி டூ ஈட் உணவுகள் குறித்தும் அதன் தொழில்நுட்ப விஷயங்கள் குறித்தும், அதன் தேவைகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
ரெடி டூ ஈட் உணவுகளுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?
நல்ல சாப்பாடு கிடைக்கவேண்டும் என்பது தான் பலரது எண்ணங்களாக இருக்கிறது. நல்ல சுவையுடன் தரமான உணவுகள் கிடைத்தால் அதற்கு சிறப்பான வரவேற்பினை அளிக்கிறார்கள் நமது மக்கள். இன்றைய சூழலில் ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு பலரும் மாறி வருகிறார்கள். அதேபோல் வேலை பளுவினை குறைத்து கொண்டு ஈஸியாக வாழவும் விரும்புகிறார்கள். இந்த ரெடி டூ இட் உணவு வகைகள் இந்தியா போன்ற நகரங்களுக்கு வியாபார சந்தைகளுக்கு புதிதல்ல. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கூட ரெடிமேட் உணவுகளுக்கான நிறைய தேவைகளும் வரவேற்புகளும் இருந்து வருகிறது. இந்த உணவுகளுக்கென அரசிடம் முறையான தரச்சான்றிதழ்களை பெற்றிருக்கிறோம். அதனால் தாராளமாக இதனை அனைவரும் பயன்படுத்தலாம்.
இவை எங்கெங்கு கிடைக்கிறது?
ரெடி டூ ஈட் உணவுகள் ஈகாமர்ஸ் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அங்குமே இதற்கான வரவேற்புகள் சிறப்பாகவே இருக்கிறது. சென்னை தி நகர் பகுதியில் எங்கள் அலுவலகம் இருக்கிறது. அங்கிருந்து கேட்பவர்களுக்கு விற்பனை செய்தும் வருகிறோம். ஈகாமர்ஸ் மற்றும் குயிக் காமர்ஸ் மூலமாக தற்போது உணவினை விற்க முடிவு செய்துள்ளோம். ஏற்கனவே இந்த ரெடி டூ ஈட் உணவுகள் வெளிநாடுகளில் பிரசித்தம் தான். அங்கேயும் இதனை விற்பனை செய்து வருகிறோம். இன்னும் 2500 க்கும் மேற்பட்ட வகை உணவுகளை தயாரிக்கும் திட்டங்கள் இருக்கிறது. வீகன் உணவுகளை கூட தயாரிக்கும் எண்ணங்கள் இருக்கிறது. மேலும் பொடி வகைகள், மசாலா வகைகள் என எங்களது தொழிலை விரிவு படுத்த நினைக்கிறோம்.
ரெடி டூ ஈட் உணவு தயாரிப்பு தொழில்நுட்பம் குறித்து சொல்லுங்கள்?
எங்களது இந்த உணவு தொழில் நுட்பம் இந்தியா மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் ஏற்றது தான். இந்த உணவுகளில் நாங்கள் பயன்படுத்தும் Retort தொழில்நுட்பம் முறையில் உணவுப்பொருட்கள் பதினெட்டு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தக் கூடியது. எப்போது உணவு பாக்கெட்களை பிரித்தாலுமே அதன் தரமோ சுவையோ குறையாமல் புத்தம் புதியதாக இருப்பது தான் இதன்சிறப்பம்சம். பேச்சுலர்கள், நெடும் தூரம் பயணிப்பவர்கள், வெளிநாடுகளுக்கு பயணிப்பவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலருக்கும் உபயோகமாக இருக்கிறது எங்களது இந்த முயற்சி. நனிசைவம் (வீகன்) , சைவம், அசைவம், சிறுதானிய கஞ்சி வகைகள், சிறுதானிய உணவுகள் என 100 உணவு வகைகளை தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறோம்.
இந்த ரெடி டூ ஈட் உணவுகளோடு பொடி வகைகள், மசாலா வகைகள் என இந்த தொழிலை பெரிய அளவில் விரிவு படுத்த நினைக்கிறோம். நாங்கள் டாக்டர் நாச்சிமுத்து அவர்களுடன் இணைந்து ஆவாரம் மூலமாக மொரிங்காவுடன் சிறுதானியங்கள் சேர்ந்து செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தயாரிக்க உள்ளோம். 11 வயது முதல் 65 வயது வரை உள்ள பெண்களுக்கு மிகுந்த பயனளிக்கும். டாக்டர் நாச்சிமுத்து அவர்கள் தமிழர்களின் உணவு கலாச்சாரத்தினை ஆய்வு செய்து 100 க்கும் மேற்பட்ட உணவுகளை தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளார். இவரது ஆய்வுகள் உலகத்தரம் வாய்ந்தவை. இவர்களுடன் இணைந்து நிறைய தயாரிப்புகளை உலகிற்கு அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
ரெடி டூ ஈட் உணவுகள் பாதுகாப்பானதா?
இதனை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சாதாரணமாக வீடுகளில் தயாரிக்கும் உணவு முறைகளை தான் பின்பற்றி வருகிறோம். ஆனால் நாங்கள் தயாரிக்கும் உணவுகள் சுவையோடு ஆரோக்கியத்தையும் பெருமளவில் கவனத்தில் கொண்டு தயாரித்து வழங்குகிறோம். உணவுகளை பேக்கிங் செய்யும் தொழில்நுட்பமே அதன் 18 மாத கால ஆயுட் காலத்தினை நீட்டிக்க செய்கிறது என்பதே நிஜம். அதில் தான் புதுமைகளை புகுத்தினோம். உணவுகளை தரமான செக்கு எண்ணெயினை உபயோகப்படுத்தி தயாரிக்கிறோம். எந்தவித செயற்கை சுவையூட்டிகளையோ, பதப்படுத்தும் பொருட்களையோ உபயோகிப்பதில்லை. எனவே தாராளமாக அனைவரும் உபயோகப்படுத்தலாம். இதனை சாதாரண சீதோஷ்ண நிலையில் வைத்து பயன்படுத்த இயலும். குளிர் சாதன பெட்டியில் வைக்க தேவையில்லை என்பதும் இதன் சிறப்பம்சம்.
ரெடி டூ ஈட் உணவு வகைகள் என்னென்ன சந்தையில் கிடைக்கிறது?
பிஸிபேளாபாத், இட்லி சாம்பார், வத்த குழம்பு, பிரியாணி வகைகள் என பல்வேறு உணவுகள் கிடைக்கிறது. பெண்களின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பூங்கார் அரிசியில் செய்த கஞ்சி போன்ற சத்துள்ள உணவுகளை கூட செய்து தருகிறோம். ரம்ஜான் கஞ்சி கூட எங்களிடம் உள்ளது. அதற்கான நல்லதொரு வரவேற்புகள் இருந்தது. நிறைய அசைவ உணவுகளையும் இதே தொழில்நுட்பத்தில் தயாரித்து உள்ளோம். எங்களது முயற்சி இன்னமும் நிறைய தயாரிப்புகளோடு வெற்றிகரமாக தொடர இருக்கிறது அதற்கான வரவேற்புகள் நிச்சயமாக கிடைக்கும்.தற்போது நிலக்கோட்டை சிப்காட் வளாகத்தில் புதிய தயாரிப்பு யூனிட் ஒன்றை செப்டம்பர் மாதத்தில் துவங்கி இருக்கிறோம். பிரபல தொழிலதிபரும் நல்லெண்ணெய் தயாரிப்பு நிறுவன அதிபர் முத்து மற்றும் எனது தாயாருடன் இணைந்து துவங்கி வைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதில் புதிய வகையான சைவ மற்றும் அசைவ உணவுகளை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இதனை மிகப்பெரிய அளவில் டிசம்பர் மாதத்தில் செய்ய இருக்கிறோம். இதன் தனிச்சிறப்பு என்றால் அது உணவுகளை பேக்கிங் செய்யும் தொழில்நுட்பமே அதன் 18 மாத கால ஆயுட் காலத்தினை நீட்டிக்க செய்கிறது என்கிறார் பெண் தொழில்முனைவோர் கண்மணி தனசேகர்.
- தனுஜா ஜெயராமன்