ஆசிரியர்களுக்கான சம்பளத்தை விரைவாக வழங்க பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
சென்னை: தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
அரசுப் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 60 கூடுதல் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறுவதில் தாமதம் தொடர்கிறது. இந்த தளத்தை தனியார் மென்பொருள் நிறுவனம் பராமரித்து வருகிறது. இதற்கு ஆரம்பம் முதலே ஆசிரியர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதனுடன், பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் உள்ள சிக்கல்களை சரிசெய்து தர தனியான அலுவலர்கள் இல்லை. ஆண்டுதோறும் கூடுதல் பணியிடங்களில் சம்பளம் பெற்று தருவதற்கு பல மாதங்களாக போராடும் நிலையே உள்ளது.
இதன்காரணமாக ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, முதுநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை விரைவாக பெற்றுதருவதுடன்,ஐஎப்எச்ஆர்எம்எஸ் வலைத்தளத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை எளிமைப்படுத்த வேண்டும். இதற்கு தீர்வு கிடைக்காதபட்சத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.