சைவ, வைணவ சமயங்கள் குறித்த முன்னாள் அமைச்சர் பேச்சின் வீடியோவை தாக்கல் செய்ய வேண்டும்: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சைவ வைணவ சமயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி என் சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி, முகாந்திரம் இல்லை என முடித்து வைக்கப்பட்டதாககூறி அது குறித்த விவரங்களை சமர்ப்பித்தார்.
1972ம் ஆண்டு சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்துக்களையே முன்னாள் அமைச்சர் தெரிவித்ததாகவும், வீடியோவை முழுமையாக பார்த்தால் விபரங்கள் தெரியவரும் என்றார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு குறித்த வீடியோவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு ஆகஸ்ட் 28ம் தேதிக்கு விசாரணையை் தள்ளி வைத்தார்.