சைதாப்பேட்டையில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, வார்டு-139 மற்றும் 142க்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 4.50 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-139க்குட்பட்ட மேற்கு ஜோன்ஸ் தெருவில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் சாரதி நகர் பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மேம்பாட்டுப் பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜாபர்கான்பேட்டை, ஆர்.வி. நகர், 69 மற்றும் 75வது தெருவில் ரூ.1.39 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே உள்ள பழைய மழைநீர் வடிகால்களை இடித்துவிட்டு, புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ராகவன் காலனி, 2வது லிங்க் தெருவில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் மருந்து சேமிப்புக் கிடங்கு கட்டுமானப் பணி ஆகியவற்றினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். தொடர்ச்சியாக, வார்டு-142க்குட்பட்ட சம்பந்தம் தெரு, நடராஜன் தெருவில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மேற்கு ஜோன்ஸ் சாலை, இன்டஸ் மற்றும் ஷேன்சைன் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் சாலையோரப் பூங்கா மேம்படுத்தும் பணி ஆகியவற்றினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
பின்னர், சுப்பிரமணிய சாலையில் ரூ.16.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 250 Kv திறன் கொண்ட மின்மாற்றியினை பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கௌஷிக், மண்டலக்குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ப.சுப்பிரமணி, மண்டல அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.