சபரிமலை கோயில் வளாகத்தில் பஞ்சலோக சிலை வைப்பதாக தமிழ்நாட்டில் நன்கொடை வசூல்
திருவனந்தபுரம்: சபரிமலை சிறப்பு ஆணையரான ஜெயகிருஷ்ணன் கடந்த சில தினங்களுக்கு முன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்த விவரங்கள் வருமாறு: சபரிமலை கோயில் வளாகத்தில் 2 அடி உயரத்தில், 108 கிலோ எடையுள்ள பஞ்சலோக ஐயப்பன் சிலையை வைக்க தனக்கு திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்துள்ளதாகவும், அதற்கு நன்கொடை வழங்கலாம் என்று கூறி ஈரோட்டில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டரான சகாதேவன் என்பவர் தமிழ்நாட்டில் நோட்டீஸ்களை விநியோகித்து வருவது கவனத்திற்கு வந்துள்ளது.
சிலை அமைக்க 9 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், நன்கொடை அனுப்புவதற்காக க்யூ ஆர் கோடு, செல்போன் நம்பர் மற்றும் இமெயில் முகவரியையும் அந்த நோட்டீசில் அவர் குறிப்பிட்டுள்ளார். சபரிமலை வளாகத்தில் புதிதாக ஐயப்பன் சிலை வைக்க எந்த திட்டமும் இல்லை. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் முரளீ கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், யாரிடமும் நன்கொடை வசூலிக்கக் கூடாது என்று டாக்டர் சகாதேவனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.