சபரிமலை மண்டல கால பூஜைகளுக்காக 16ம் தேதி நடை திறப்பு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் வரும் 17ம் தேதி முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நடை திறந்த பின்னர் அடுத்த ஒரு வருடத்திற்கான புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
மறுநாள் (17ம் தேதி) முதல் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயிலில் புதிய மேல்சாந்திகள் நடை திறந்து பூஜைகளை நடத்துவார்கள். அன்று முதல் நெய்யபிஷேகம் உள்பட பூஜைகள் தொடங்கும். டிசம்பர் 27ம் தேதி பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும். இந்நிலையில் மண்டல கால தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
பக்தர்கள் sabarimalaonline.org என்ற இணையதளத்தில் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். வண்டிப்பெரியார் சத்திரம், எருமேலி, நிலக்கல், பம்பா ஆகிய இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்களும் செயல்படும். ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி கவுண்டர்கள் மூலம் 20 ஆயிரம் பேருக்கும் முன்பதிவு செய்யலாம்.
பக்தர்கள் மரணமடைந்தால் இன்சூரன்ஸ் தொகை வழங்கும் திட்டத்துக்கு நிதி சேகரிப்பதற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ரூ. 5 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கட்டாயம் அல்ல. இந்த இன்சூரன்ஸ் பலனை அடைவதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஆவணங்கள் தேவைப்படுவதால் பக்தர்கள் முடிந்தவரை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முயற்சிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.