சபரிமலையில் 27 வருடங்களுக்கு முன் பதிக்கப்பட்ட தங்கத்தகடுகள் தொடர்பான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக் குழு கைப்பற்றியது
திருவனந்தபுரம்: சபரிமலையில் 27 வருடங்களுக்கு முன் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டது தொடர்பான முக்கிய ஆவணங்களை திருவனந்தபுரம் தேவசம் போர்டு அலுவலகத்தில் இருந்து சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று கைப்பற்றியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 1998ம் ஆண்டு தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டன. இதற்காக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா 30.300 கிலோ தங்கமும், 1900 கிலோ செம்பும் நன்கொடையாக வழங்கினார்.
இவற்றை பயன்படுத்தி கோயிலின் மேற்கூரை, பக்கச்சுவர்கள், கதவு, நிலை, படிகள் மற்றும் 2 துவாரபாலகர் சிலைகளில் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டன. இந்நிலையில் சமீபத்தில் இந்த தகடுகளில் இருந்து தங்கம் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உண்ணிகிருஷ்ணன் போத்தி மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் துணை கமிஷனர் முராரி பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் சபரிமலையில் இருந்து தங்கம் திருடப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே 1998ல் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கூறி கடந்த சில வாரங்களுக்கு முன் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சிறப்பு புலனாய்வுக் குழு ஒரு கடிதம் அனுப்பியது. ஆனால் பல்வேறு காரணங்களைக் கூறி அந்த ஆவணங்களை ஒப்படைக்க தேவசம் போர்டு மறுத்து வந்தது.
இந்நிலையில் நேற்று சிறப்பு புலனாய்வுக் குழு திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தி தங்கத் தகடுகள் பதிக்கப்பட்டது தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது. இந்த ஆவணங்களை பரிசோதித்தால் சபரிமலை கோயிலில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு தங்கம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும். இதன் மூலம் எவ்வளவு தங்கம் திருடப்பட்டது என்பதை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்துள்ளது.