சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக முன்னாள் அர்ச்சகர் கைது!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருட்டு தொடர்பாக முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரத்தில் உன்னிகிருஷ்ணனிடம் 10 மணி நேரம் விசாரணைக்கு பிறகு சிறப்பு புலனாய்வுக் குழு அவரை கைது செய்தது. சபரிமலை கோயில் துவார பாலகர் சிலை கவசம் செய்ய வழங்கப்பட்ட தங்கம் திருட்டு என்று புகார் எழுந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகள் மாயமான விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயில் கதவு, நிலை, 2 துவாரபாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகள் செம்பு என்று கூறி பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதிலிருந்து பெருமளவு தங்கம் திருடப்பட்டது தேவசம் போர்டு விஜிலன்ஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சிறப்பு புலனாய்வுக் குழு கடந்த சில நாட்களாக ஐதராபாத் மற்றும் சென்னையில் விசாரணை நடத்தி வந்தது.
இது தொடர்பாக 9 தேவஸ்வம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கமுலாம் பூசும் செலவை கர்நாடகா மாநிலத்தை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் உன்னிகிருஷ்ணனிடம் 10 மணி நேரம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய பின்னர் அவரை கைது செய்தது. புகாரின்பேரில் உன்னி கிருஷ்ணன் போத்தி உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.