சபரிமலை ஐயப்பன் கோயில் நிறைபுத்தரிசி பூஜைக்கு அச்சன்கோவிலில் இருந்து நெற்கதிர்கள் பயணம்
நேற்று அச்சன்கோவில் அய்யப்பன் கோயிலுக்கு சொந்தமான வயலில் இருந்து தேவசம்போர்டு அதிகாரிகள், கோயில் மேல்சாந்திகள் தலைமையில் நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டது. இந்த வாகனம் செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை பகுதிக்கு வந்தது. அப்போது கடையநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் ஏராளமானோர் அந்த வாகனத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து கோட்டைவாசல் கருப்பசாமி கோயிலில் பூஜைகள் செய்து பின்னர் ஆரியங்காவு ஐயப்பன் கோயிலிலும் பூஜைகள் செய்து சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சபரிமலைக்கு செல்லும் வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் காலை நிறைபுத்தரிசி பூஜை நடக்கிறது. இதற்காக நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனமும், அபிஷேகமும் நடைபெறும். தொடர்ந்து மேல்சாந்தி நெற்கதிர்களை தலையில் சுமந்து, கோயிலை வலம் வந்து கோயிலுக்குள் கொண்டு செல்வார். அங்கு அவர் சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர், நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சபரிமலையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பூஜிக்கப்பட்ட நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாகவும் வழங்கப்படும். பிரசாத நெற்கதிர்களை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.