சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கான மாலை வேட்டி விற்பனை களை கட்டுகிறது: கார்த்திகைக்கு 1 வாரம் முன்பே பக்தர்கள் ஆர்வம்
ஈரோடு: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கான மாலை, வேட்டி விற்பனை ஈரோட்டில் படுஜோராக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 1ம் தேதி ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். அதன்படி, கார்த்திகை முதல் தேதி வரும் 17ம் தேதி வருகிறது. இதையொட்டி, மாலை அணியும் பக்தர்களுக்காக வேட்டிகள், துண்டுகள், மாலைகள், ஐயப்பன் உருவப்படம் பதித்த டாலர்கள் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் துளசி மாலை, ருத்ராட்ச மாலை, முத்துமணி மாலை உள்ளிட்டவற்றின் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.
பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான நீலம் மற்றும் கருப்பு நிற வேஷ்டிகள், பூஜைக்கு பயன்படுத்தும் ஊதுபத்தி, சூடம், சந்தனம், குங்குமம், ஜவ்வாது போன்ற விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘108 எண்ணிக்கையில் பெரிய மாலைகள், 54 எண்ணிக்கையில் சிறிய மாலை ஆகியவற்றை பக்தர்கள் அணிவது வழக்கம். இவற்றில் சந்தன மாலை, துளசி மாலை, ஈச்சர மணி மாலை உள்ளிட்ட வகைகள் உள்ளன. பெரிய மாலைகள் ரூ.120, ரூ.160, ரூ.200, ரூ.220 என்ற விலைகளிலும், சிறிய மாலைகள் ரூ.80, ரூ.100, ரூ.120, ரூ.140 விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. கருப்பு, நீல நிறங்களில் வேட்டி ரூ.180 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது. ஐயப்பன், விநாயகர் உருவம் பதித்த டாலர்கள் ரூ.10 முதல் விற்பனையாகிறது’’ என்றனர்.