சபரிமலை கோயிலில் தங்கம் மாயமான விவகாரம்: 3வது நாளாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்கம் மயமான விவகாரத்தில் கேரள சட்டப்பேரவையில் 3வது நாளாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட 30 கிலோவுக்கு அதிகமான தங்கம் மாயமான விவகாரம் கேரள அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. காலையில் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கிய உடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கம் மயமான விவகாரத்திற்கு பொறுப்பேற்று தேவசம் போர்டு அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். பதாகைகளுடன் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும் அவர்கள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டத்தால் சட்டபேரவை நடவடிக்கைகள் 3வது நாளாக பாதிக்கப்பட்டன. அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேவசம் போர்டு அமைச்சர் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டின் மூத்த அதிகாரியான முராரி பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலையில் இருந்து நான்கரை கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் தங்கம் முலாம் பூசப்பட்ட சிலையை செம்பு பூசப்பட்ட சிலை என்று ஆவணத்தில் பதிவு செய்ததால் தேவசம் போர்டு முராரி பாபு மீது நடவடிக்கை எடுத்துள்ளது.