சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளைய உடனடி தரிசன முன்பதிவு 5,000ஆக குறைப்பு!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளைய உடனடி தரிசன முன்பதிவு 5,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் உடனடி தரிசன முன்பதிவு 10,000ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் 5,000ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் முந்தைய வருடங்களை விட இந்த மண்டல காலத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினமும் ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பேருக்கும், உடனடி முன்பதிவு மூலம் 20 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உடனடி கவுண்டர்களில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்ததால் சபரிமலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் உடனடி முன்பதிவு எண்ணிக்கை இன்று வரை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
இதன் பலனாக பக்தர்கள் வருகை சற்று கட்டுப்படுத்தப்பட்டது. நெரிசலும் குறைந்ததால் கடந்த சில நாட்களாக பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து உடனடி முன்பதிவு எண்ணிக்கையை ஒவ்வொரு நாளின் சூழ்நிலைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ள கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில் நாளைய உடனடி தரிசன முன்பதிவு 5,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் உடனடி தரிசன முன்பதிவு 10,000ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் 5,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வருகை மீண்டும் அதிகரித்த நிலையில் உடனடி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 5,000ஆக குறைக்கப்பட்டது. கடந்த 9 நாள்களில் சபரிமலையில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 7.25 லட்சத்தை தாண்டியது.