துருப்பிடித்து வீணாகி வருவதால் வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்களை ஏலம் விட வலியுறுத்தல்
நெய்வேலி : நெய்வேலி நகர எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனையின் போதும், பல்வேறு குற்ற வழக்குகள், சாலை விபத்து உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.
இந்த வாகனங்கள் வழக்கு முடியும் வரை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. சில வாகனங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில், அவற்றின் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்நிலையில் நெய்வேலி நகர காவல் நிலையம் எதிரில் சுமார் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிற்பதால் துருப்பிடித்து உருக்குலைந்து வீணாகும் நிலை ஏற்படுகிறது.
இதனால் அவற்றின் மதிப்பு குறைந்து ஏலத்தின் போது அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில் உள்ளது. எனவே வீணாகி வரும் வாகனங்களை ஏலம் விட கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காவல் அதிகாரி கூறுகையில், நீதிமன்றத்தில் வழக்கு முடிந்தும் வாகன உரிமையாளர்கள் வாகனத்தை மீட்க வரவில்லை எனில், ஆர்டிஓ அலுவலகம் மூலம் அந்த வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படும். தற்போது நிலுவையில் உள்ள வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடைமுறையில் சிக்கல் உள்ளதால் வாகனங்கள் தேங்கி விடுகின்றன, என்றனர். எனவே பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.