அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியது ரஷ்யா : மீண்டும் பனிப்போர் காலத்து பயங்கரமா?
மாஸ்கோ: பனிப்போர் கால பதற்றத்தைத் தணிக்க 1987ம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே கையெழுத்தான ‘நடுத்தர தொலைவு அணுசக்தி ஏவுகணைகள் ஒப்பந்தம்’ (ஐஎன்எஃப்), உலக ஆயுதக் கட்டுப்பாட்டின் மூலக்கல்லாகக் கருதப்பட்டது. ஆனால், ரஷ்யா தடை செய்யப்பட்ட ஏவுகணையை உருவாக்கியதாகக் கூறி, 2019ல் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. தொடர்ந்து, அமெரிக்கா ஏவுகணைகளை நிலைநிறுத்தாத வரை தாமும் நிலைநிறுத்தப் போவதில்லை என ரஷ்யா ஒருதலைப்பட்சமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் தங்களது தேசியப் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறி, ரஷ்யா தற்போது அந்த ஒப்பந்தத்திற்கு இனிமேல் கட்டுப்படப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிலிப்பைன்ஸில் அமெரிக்கா ஏவுகணை செலுத்தி நிலைநிறுத்தியதும், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரின் அணு ஆயுத எச்சரிக்கைக்குப் பதிலடியாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷ்யா அருகே அனுப்பியதும், இந்த முடிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகப் பாதுகாப்பிற்கு தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்த முடிவு, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நடுத்தர, குறுகிய தூர அணு ஆயுத ஏவுகணைகளை ரஷ்யா நிலைநிறுத்த வழிவகுக்கும். மேலும் பனிப்போர் காலத்தைப் போன்றதொரு புதிய ஆயுதப் போட்டிக்கு வித்திடக்கூடும். இதனால், ரஷ்யாவின் எல்லைக்கு அருகே உள்ள நேட்டோ உறுப்பு நாடுகள் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்திய நாடுகள் அதிகரித்த அபாயங்களை எதிர்கொள்கின்றன. ஏற்கனவே, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான ‘நியூ ஸ்டார்ட்’ ஒப்பந்தத்தில் இருந்தும் ரஷ்யா தனது பங்களிப்பை நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஐஎன்எஃப் ஒப்பந்தத்தின் வீழ்ச்சியானது, அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் சர்வதேச கட்டமைப்பை முற்றிலுமாகச் சிதைத்துள்ளது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுக்கு ஆகஸ்ட் 8ம் தேதி வரை (நாளை மறுநாள்) டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளதும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகள் மீது வரிவிதிப்பு போன்ற பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்ற மிரட்டலும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.