ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரம் டிரம்பிடம் மோடி பேசவே இல்லை : ஒன்றிய வெளியுறவுத்துறை விளக்கம்
புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் உறுதியளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடியதாகவும், அப்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திக்கொள்ளும் என மோடி தன்னிடம் உறுதி அளித்ததாகவும் கூறினார்.
மேலும், பிரதமர் மோடியை ‘சிறந்த மனிதர்’ என்றும், இந்தியா ‘நம்பமுடியாத வளர்ச்சியை கொண்ட நாடு’ என்றும் புகழ்ந்த டிரம்ப், மலேசியாவில் நடைபெறவுள்ள ஆசியான் உச்சி மாநாட்டின் இடையே இருவரும் சந்திக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டார். இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, ‘ஆம், நிச்சயமாக, அவர் என் நண்பர். எங்களுக்குள் சிறந்த உறவு இருக்கிறது’ என்று பதிலளித்தார்.
டிரம்ப் தனது பேச்சின்போது, ‘ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அவர் (மோடி) இன்று எனக்கு உறுதியளித்தார். அதை உடனடியாகச் செய்ய முடியாது; இது சிறிய வழிதான்; ஆனால் விரைவில் முடிந்துவிடும். நாங்கள் ரஷ்ய அதிபர் புடினிடம் கேட்பதெல்லாம், இந்தியாவுக்கு எண்ணெய் சப்ளை செய்தை நிறுத்த வேண்டும் என்பதுதான்’ என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதிபர் டிரம்பின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக ஒரு மறுப்பு அறிக்கையை வெளியிட்டது.
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இதுகுறித்து பேசுகையில், ‘எரிசக்தி விவகாரம் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்த கருத்து குறித்து நாங்கள் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளோம். தொலைபேசி உரையாடலைப் பொறுத்தவரை, பிரதமர் மோடிக்கும், அதிபர் டிரம்புக்கும் இடையே அதுபோன்ற எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்பதை என்னால் கூற முடியும்’ என்றார். மேலும், இந்தியாவின் எரிசக்தி இறக்குமதிக் கொள்கை குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கையையும் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது.
அதில், 2இந்தியாவின் முடிவுகள் இந்திய நுகர்வோரின் நலன்கள் மற்றும் தேசிய எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே எடுக்கப்படுகின்றனவே தவிர, வெளிநாட்டு அரசியல் காரணங்களுக்காக அல்ல. நிலையான எரிசக்தி விலைகள் மற்றும் பாதுகாப்பான விநியோகத்தை உறுதி செய்வதே ஒன்றிய அரசின் கொள்கையாகும். அதன்படியே எரிசக்திக் கொள்கையின் இரட்டைக் குறிக்கோள்கள் வகுக்கப்படுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அமெரிக்காவுடனான எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்த பல ஆண்டுகளாக இந்தியா முயன்று வருவதாகவும், அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.