ரஷ்ய எண்ணெய் வாங்கி லாபம் பார்ப்பதால் இந்தியா மீதான வரிகளை மேலும் உயர்த்த போகிறேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல்
வாஷிங்டன்: உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா தான் அதிகமான வரி விதிப்பதாக குற்றம்சாட்டிய அதிபர் டிரம்ப், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கு அபாரதமும் விதித்துள்ளார். டிரம்பின் இந்த 25 சதவீத வரி மற்றும் அபராதம் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே, டிரம்பை சமாதானப்படுத்தி, அமெரிக்காவுடன் விரைவில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இந்தியா மீதான வரிகளை மேலும் உயர்த்தப் போவதாக டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். அவர் நேற்று தனது சமூக ஊடக பதிவில், ‘‘இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்குவது மட்டுமின்றி அதில் பெரும் பகுதியை வெளிச்சந்தையில் கொள்ளை லாபத்திற்கு விற்கிறது. ரஷ்யா நடத்தி வரும் போரால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பதை பற்றி இந்தியாவுக்கு கவலையில்லை. அதனால் இந்தியா மீதான வரிகளை மேலும் கணிசமாக உயர்த்துவேன்’’ என கூறி உள்ளார். இதற்கிடையே இந்தியா மீது வெள்ளை மாளிகை துணை தலைவர் ஸ்டீபன் மில்லர் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் ஸ்டீபன் மில்லர் கூறுகையில், உலகிலேயே அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இந்தியா தன்னை சித்தரித்துக்கொள்கிறது. ஆனால் அவர்கள் எங்களது தயாரிப்புக்களை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் எங்கள் மீது மிகப்பெரிய வரிகளை விதிக்கிறார்கள். அவர்கள் குடியேற்ற கொள்கைகளில் நிறைய ஏமாற்றுதல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம். இது அமெரிக்க தொழிலாளர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். நாம் மீண்டும் பார்க்கிறோம். அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகிறார்கள். இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலமாக உக்ரைன் போருக்கு ரஷ்யாவிற்கு நிதியளிப்பதை தொடருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அதிபர் டிரம்ப் தெளிவாக தெரிவித்துள்ளார் என்றார்.