2 நாள் அரசுமுறைப் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்தார்: விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடி வரவேற்று விருந்தளித்தார்; இருநாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து
புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று இந்தியா வந்தார். பிரதமர் மோடி டெல்லி பாலம் விமான நிலையத்திற்கு நேரில் சென்று புடினை வரவேற்று விருந்தளித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான உச்சி மாநாட்டில் இன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்தியா-ரஷ்யா இடையேயான 23வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று மாலை 6.35 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி வந்தார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் நீண்டகால நண்பனான அதிபர் புடினை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். இரு தலைவர்களும் கைகுலுக்கி ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வரவேற்றனர். மேலும், இரு தலைவர்களும் ஒரே காரில் ஏறி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
சுமார் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் இரவு விருந்து அளித்தார். இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூலையில் பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்த போது அதிபர் புடின் இரவு விருந்தளித்தார். அதற்கு பிரதிபலனாக இம்முறை புடினுக்கு மோடி விருந்தளித்துள்ளார். இதையடுத்து, புடினின் இந்திய பயணத்தின் முக்கிய நிகழ்வுகள் இன்று நடக்க உள்ளன. இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் அதிபர் புடினுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு சார்பில் வரவேற்பு அளிக்க உள்ளார். காலை 11.30 மணிக்கு இந்திய தலைவர்களின் நினைவிடங்களில் அதிபர் புடின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார். அதன் பின் காலை 11.50 மணிக்கு ஐதராபாத் இல்லத்தில் 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதில், பிரதமர் மோடி, அதிபர் புடினுடன் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்புகளால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு சீர்குலைந்துள்ளது. இந்த சமயத்தில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் அதிகமான கச்சா எண்ணெய் வாங்குவதால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதை நிவர்த்தி செய்ய, பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் வர்த்தகத்தை மேம்படுத்த அதிபர் புடின் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகளை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மருந்துகள், விவசாயம், உணவுப் பொருட்கள், நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, பாதுகாப்பு மற்றும் எரிசக்தி துறைகளிலும் இருதரப்பு உறவை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் சிறிய அணு மின் நிலையங்களை அமைப்பது தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. ரஷ்யாவின் எஸ்-57 ஐந்தாம் தலைமுறை நவீன போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் சமீபத்திய முயற்சிகள் குறித்து புடின் மோடியிடம் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்குவதால் அமெரிக்காவின் பொருளாதார தடைகளின் தாக்கம் குறித்தும் உச்சிமாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு தரப்பிலும் முக்கிய பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. அவற்றில் இந்தியர்கள் ரஷ்யாவில் பணியாற்றுவதை எளிதாக்குவது, பாதுகாப்பு ஒத்துழைப்பின் பரந்த கட்டமைப்பின் கீழ் தளவாட ஆதரவு வழங்குவது ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன. உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ரஷ்ய அரசின் புதிய இந்திய டிவி சேனலை புடின் தொடங்கி வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி முர்மு அளிக்கும் அரசு விருந்தில் கலந்து கொள்கிறார். பின்னர் இரவு 9 மணி அளவில் டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு செல்கிறார். அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு மத்தியில் ரஷ்யா அதிபர் புடினின் இந்திய பயணத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கவனிக்கின்றன.
* ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஆண்டுதோறும் ரூ.5.85 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்கிறது.
* இந்தியாவிடமிருந்து ரஷ்யா வெறும் ரூ.45,000 கோடிக்கான வர்த்தகத்தை மட்டுமே மேற்கொள்கிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பற்றாக்குறை ரூ.5.40 லட்சம் கோடியாக உள்ளது.
* உச்ச மாநாட்டிற்கு முன்பாக இந்தியா, ரஷ்யா நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இதில் எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை கூடுதலாக வாங்குவது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.
* ‘அப்பட்டமான பொய்’: ராகுலுக்கு பாஜ பதில்
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து பாஜ தலைமை செய்தித் தொடர்பாளர் அனில் பலுனி எக்ஸ் பதிவில், ‘‘எந்தவொரு வெளிநாட்டு தலைவரின் வருகையின் போது, அவருக்கான சந்திப்புகளை வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்கிறது. ஆனால் அரசு தரப்பை தாண்டிய சந்திப்புகளை மேற்கொள்வது அந்தந்த வெளிநாட்டு தலைவர்களை பொறுத்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ராகுல் காந்தி 5 வெளிநாட்டு தலைவர்களை சந்தித்துள்ளார். அதற்கான புகைப்படங்களை வெளியிடுகிறேன். இவை ராகுல் காந்தி சொல்வது அப்பட்டமான பொய் என்பதை காட்டுகிறது. ஆனாலும், ராகுல் காந்தி ஒவ்வொரு முறை வெளிநாட்டிற்கு செல்லும் போதும் அங்கு இந்தியாவையும் இந்திய ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் கெடுக்கிறார்’’ என்றார்.
* ‘வெளிநாட்டு தலைவர்களை சந்திக்க அனுமதிப்பதில்லை’
ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வந்துள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரை சந்திப்பது மரபு. இது வாஜ்பாய் ஆட்சியிலும், மன்மோகன்சிங் ஆட்சியிலும் பின்பற்றப்பட்டது. இது ஒரு பாரம்பரியமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது வெளிநாட்டு தலைவர்கள் இங்கு வரும் போதும், நான் வெளிநாடு செல்லும் போதும், எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க வேண்டாம் என ஒன்றிய அரசு அறிவுறுத்துகிறது. இதை ஒவ்வொரு முறையும் செய்கிறார்கள். நான் வெளிநாடு செல்லம் போதும், வெளிநாட்டு தலைவர்கள் வரும் போதும், ‘அரசு உங்களை சந்திக்க வேண்டாம்’ என கூறியுள்ளதாக அவர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி எங்களுக்கு கிடைக்கிறது. அரசு மட்டும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. நாங்களும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். மோடி அரசு இவ்வாறு செய்வது அவர்களின் பாதுகாப்பின்மையை காட்டுகிறது’’ என்றார்.