இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடியுடன் ஒரே காரில் பயணம்
டெல்லி: 2 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்த ரஷ்ய அதிபர் புடினை பிரதமர் மோடி வரவேற்றார். உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்தார். தற்போது, பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். இந்தியாவின் பாரம்பரிய கலை, நிகழ்ச்சிகளுடன் ரஷ்ய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் ஒரே காரில் பயணிக்கின்றனர். தொடர்ந்து இரவு விருந்து அளிக்கிறார்.
`ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது ரஷ்யாவின் எஸ் - 400 வான் பாதுகாப்பு கவசம் முக்கிய பங்காற்றியது. இந்த சூழலில், இன்று ரஷ்ய அதிபர் இந்தியா வருகிறார். அவரது வருகை முன்னிட்டு இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதின் வருகையையொட்டி டெல்லியில் விமான நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் ரஷ்ய அதிபர் பாதுகாப்பு படையினர், இந்திய தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் (என்எஸ்ஜி), ஸ்னைப்பர்கள், டிரோன்கள், சிக்னல் ஜாமர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக ரஷ்யாவில் இருந்து 48 உயர்மட்ட பாதுகாப்பு பணியாளர்கள் ஏற்கனவே டெல்லிக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி போலீசார் மற்றும் என்எஸ்ஜி அதிகாரிகளுடன் புதினின் பயணத்தின் அனைத்து வழிகளையும் அவர்கள் முழுமையாக சரிபார்த்து வருகின்றனர். என்எஸ்ஜி, டெல்லி போலீசார், ரஷ்ய அதிபர் பாதுகாப்பு படையினர் சுற்றியிருக்க பிரதமர் மோடி, புதினுடன் இருக்கும்போது சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) கமாண்டோக்களும் இந்த பாதுகாப்பில் பணியாற்றுவர். இந்த பயணத்தின் போது புதின் சாலை மார்க்கமாக பயணிக்க அவரின் பாதுகாப்பு கவச வாகனமான ‘அராஸ் செனட்’ சொகுசு கார் மாஸ்கோவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்படுகிறது.
புதின் தங்கியிருக்கும் ஓட்டலை தவிர, ராஜ்காட், ஐதராபாத் ஹவுஸ் மற்றும் பாரத் மண்டபம் போன்ற அவர் செல்லும் அனைத்து இடங்களையும் பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.