ரஷ்ய அணு ஆயுத படைகளின் ஒத்திகை: அதிபர் புதின் பார்வையிட்டார்
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 15ம்தேதி அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், போர்நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஹங்கேரியில் நடக்கும் மாநாட்டில் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும், அப்போது இந்த போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரப்படும் என நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனிடையே உக்ரைன் உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் உடன்பாடில்லை என ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜியோ லவ்ரவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்பும், ரஷ்ய அதிபர் புதினும் சந்திக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரஷ்ய அணு ஆயுத படைகளின் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிலம், நீர், ஆகாயத்தில் பயன்படுத்தப்படும் அணு ஆயுதங்கள் ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட்டன. கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், விமானம் மூலம் ஏவப்படும் ஏவுகணைகள், நீர்மூழ்கி கப்பல், குண்டுவீச்சு விமானங்கள் ஆகியவையும் ஈடுபடுத்தப்பட்டன. இதனை அதிபர் புதின் மேற்பார்வையிட்டார்.