ரஷ்ய டிரோன்கள் எல்லையில் நுழைந்ததால் பதற்றம் போலந்துக்கு மூன்று ரபேல் போர் விமானங்களை அனுப்பியது பிரான்ஸ்
வார்ஸா: உக்ரைனில் தாக்குதல் நடத்திய ரஷ்ய டிரோன்கள் போலந்து நாட்டுக்குள் நுழைந்தது. ரஷ்ய டிரோன்களை போலந்து சுட்டு வீழ்த்தியது. நேட்டோவின் உறுப்பினர் நாட்டுக்குள் டிரோன்களை ஏவிய ரஷ்யாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று நேட்டோவை உக்ரைன் வலியுறுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலந்தின் கிழக்கு எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் பல ஐரோப்பிய நாடுகள் பிராந்தியத்தை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில்,போலந்தின் வான் எல்லையின் பாதுகாப்புக்கு 3 ரபேல் போர் விமானங்களை பிரான்ஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், போலந்தின் பாதுகாப்பு பற்றி பிரதமர் டொனால்ட் டஸ்க்கிடம் உறுதி அளித்துள்ளேன். ரபேல் வகை விமானங்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது பற்றி,இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், நேட்டோ பொது செயலாளர் மார்க் ருட்டேவிடம் விவாதித்தேன் என்று தெரிவித்துள்ளார்.