மலிவு விலையில் வாங்கப்படும் ரஷ்ய கச்சா எண்ணெயால் கொள்ளை லாபம் யாருக்கு: தனியார் நிறுவனங்கள் காட்டில் பண மழை: விற்பனை விலை குறையாததால் பாதிக்கும் மக்கள்
* ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சில சமயங்களில் மொத்த இறக்குமதியில் 40% வரை ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
* ரஷ்யாவிடமிருந்து ஜூன் மாதம் மட்டும் 2.2மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
* ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் முதன்மையான மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியுள்ளது. உக்ரைன் போருக்கு முன் 2 சதவீதத்தில் இருந்த இறக்குமதி இப்போது கிட்டத்தட்ட 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
* ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத்திலிருந்து வாங்கப்படும் மொத்த அளவைவிட ரஷ்யா இறக்குமதி அதிகமாகும்.
* இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மார்ச் மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து ஒரு நாளைக்கு 5,32,700 பேரல்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து இருக்கிறது.
* கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வில் இந்தியா உலகில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது.
* 2024 நிதியாண்டில் சுமார் 62.44 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்ந்தது.
* 2024ஆம் ஆண்டு மட்டும் ரூ.56 ஆயிரம் கோடிக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா.
என்ன தான் மிரட்டினாலும், என்ன தான் கெஞ்சினாலும் உக்ரைன் மீதான போரை நிறுத்த மறுக்கிறார் ரஷ்ய அதிபர் புடின். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் இந்த போரை நிறுத்த முடியாமல் தவிக்கிறார் டிரம்ப். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி செய்தன. செய்து வருகின்றன. அதனால் சமாளிக்கிறது. ஆனால் ரஷ்யா எப்படி சமாளிக்கிறது?. அந்த வியூகத்தில் யோசித்து இப்போது இந்தியாவுக்கு 500 சதவீத வரி விதிக்கும் முடிவுக்கு வந்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். உக்ரைன்-ரஷ்யா போருக்கும் இந்தியாவுக்கு 500 சதவீத வரியை அமெரிக்கா விதிப்பதற்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால் தான் தெரியும் ரஷ்யா-இந்தியா இடையிலான கச்சா எண்ணெய் இறக்குமதி வர்த்தகம்.
உக்ரைன் போருக்கு முன்னர் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்து வருவாய் பார்த்தது ரஷ்யா. ஆனால் உக்ரைனை தாக்கியதால் ஒரே நாளில் ரஷ்யாவுடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி விட்டன ஐரோப்பிய யூனியன் நாடுகள். தவித்துப்போன ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் தருவதாக கூறிப்பார்த்தும் யாரும் சீண்டவில்லை. இந்த நிலையில் தான் இந்தியாவும், சீனாவும் மிகவும் தைரியமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடிவு எடுத்தன.
குறிப்பாக 2022க்குப் பிறகு, இந்தியா ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. 2025 மே மாதத்தில் மட்டும் இந்தியா ரஷ்யாவிலிருந்து ஒரு நாளைக்கு சுமார் 19.6 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தது. இது கடந்த பத்து மாதங்களில் இல்லாத அளவு என்கிறது வர்த்தக பிரிவு. இந்த இறக்குமதி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுவும் பேரல் 75 டாலர் என்ற குறைந்த விலையில்.
இதே போல் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து குறைந்தவிலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இப்போது இந்தியா, சீனாவுக்கு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் தான் மிகப்பெரிய பலம். அதே போல் உக்ரைனுக்கு எதிரான 3 ஆண்டுகால போரில் எந்த வித பொருளாதார நெருக்கடியும் இல்லாமல் ரஷ்யா கடந்து செல்வதற்கும் இந்த வர்த்தகம் தான் காரணம். இதை அறிந்தும் விடுவாரா டிரம்ப்? அதனால் தான் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் விவாதம் நடக்கிறது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள ரஷ்ய தடைகள் சட்ட மசோதா 2025 அமல்படுத்தப்பட்டால், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய பொருட்கள் அல்லது யுரேனியம் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 500 விழுக்காடு வரி விதிக்கப்படும். இது இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
அமெரிக்கா இப்படி பகிரங்கமாக நடவடிக்கை எடுத்தாலும் இந்தியா எதற்கும் அசரவில்லையே ஏன்? இதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி. அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் வாங்கும் கச்சா எண்ணெய்யை இந்தியா சுத்திகரிப்பு செய்து உலகம் முழுவதும் சுத்தமான பெட்ரோல், டீசலாக ஏற்றுமதி செய்து வருவாய் பார்க்கிறது என்பதுதான் இதில் ஹைலைட். இலங்கை, நேபாளம், பூடான் ஆப்கன் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்த ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் கூட சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்து வருகிறது இந்தியா.
இதனால் தான் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வில் இந்தியா உலகில் மூன்றாவது பெரிய நாடாக உள்ளது. இந்தியா தினமும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 51 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. இது சுத்திகரிப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசலாக மாற்றப்படுகிறது. ரஷ்யா, சவுதி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை மிகவும் குறைந்தவிலையில் இந்தியா சுத்திகரிப்பு செய்கிறது. மேலும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்கு தேவையான தரமான கிராக்கர் யூனிட்கள் இந்தியாவில் உள்ளன. மற்ற நாடுகளில் இந்தியா போன்று குறைந்தவிலையில் சுத்திகரிக்க முடியாது என்பதாலும், தரமான கிராக்கர் யூனிட் இல்லை என்பதாலும் உலக அளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஏற்றுமதியில் இந்தியா கொடி கட்டிப்பறக்கிறது. அதனால் தான் அமெரிக்கா மிரட்டியும் அடித்து ஆடுகிறது இந்தியா.
ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்தும் அதில் ஒரு பைசா கூட நாட்டின் 140 கோடி மக்களுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை விலை குறைக்கப்படவில்லை. அதேநேரத்தில் இதன் மூலம் அம்பானி போன்ற தனிநபர்கள் லாபம் ஈட்ட ஒன்றிய அரசு வழி வகுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியைப் பொருத்தவரை ரிலையன்ஸ், நயாரா நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரியுடன் முடிந்த ஓராண்டில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்த கச்சா எண்ணெய் மூலம் சுமார் ரூ.6,850 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்த நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்கும் வகையில் ஒன்றிய அரசு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல், விமான பெட்ரோல் மீதான கொள்ளை லாப வரியை நீக்கி விட்டது. கடந்த 2022 ஜூலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் விமான பெட்ரோலுக்கு ரூ.6 எனவும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.13 எனவும் இந்த கொள்கை லாப வரி விதிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில், இந்திய மக்களுக்கு கச்சா எண்ணெய் குறையும்போது அதற்கான பலன் கிடைக்கும் வகையில் விலை குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்தியாவுக்கு ஏன் 500 சதவீத வரி?
குடியரசுக் கட்சித் தலைவரும் செனட் அவை உறுப்பினருமான லிண்ட்ஸே கிரஹாம் கடந்த ஏப்ரலில் இதுதொடர்புடைய மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார். இதுதொடர்பாக செனட் உறுப்பினர் லிண்ட்ஸே கிரஹாம்,’ எந்த நாடாவது ரஷ்யாவிடம் பொருட்கள் வாங்கிக்கொண்டு, அதே நேரம் யுக்ரேனுக்கு உதவி செய்யாமல் இருந்தால், அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் பொருட்களுக்கு 500% வரி விதிக்க வேண்டும், இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து 70 விழுக்காடு எண்ணெயை வாங்குகின்றன, அதுவே அவர் தொடர்ந்து போர் புரிய உதவுகிறது. எனது மசோதாவுக்கு இதுவரை 84 எம்.பி.களின் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தியா, சீனா மற்றும் பிற நாடுகள் புடினின் யுத்த கொள்கையை ஆதரிப்பதை நிறுத்தி, அவர் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை உறுதி செய்யும் வகையில் இந்த நாடுகள் மீது வரி விதிக்க தேவையான அதிகாரத்தை இந்த மசோதா அதிபருக்கு வழங்கும்’ என்று கூறினார்.
* ஒன்றிய அரசுக்கு ரூ.4,32,394 கோடி லாபம்
ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததால், சர்வதேச போர் பதற்றம் இந்தியாவை பெரிய அளவில் பாதிக்கவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் பெட்ரோல், டீசல் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.20 வரை குறைத்திருக்கலாம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரத்தில், கச்சா எண்ணெய் மீதான செஸ் வரி, சுங்க வரி, கலால் வரி, சேவை வரிகளால் ஒன்றிய அரசுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் கச்சா எண்ணெய் மீதான செஸ் வரி, சுங்க வரி, கலால் வரி, சேவை வரிகளால் ரூ. 4,32,394.1 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
* நம்பர் 1 ரஷ்யா தான்
இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகளில் முதலிடத்தில் ரஷ்யா இருக்கிறது, இரண்டாவது இடத்தில் ஈராக் மூன்றாவது இடத்தில் சவுதி அரேபியா இருக்கிறது. உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் நுகர்வில் 3வது பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. இதில் பெரும்பாலான எண்ணெய் நாம் ரஷ்யாவிடம் இருந்து தான் இறக்குமதி செய்கிறோம்.
* உலகில் நம்பர் 2 இந்தியா
இந்தியா தரம்பிரித்த பெட்ரோலிய பொருட்கள் உலக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரம்பிரித்த பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் அதிக அளவில் இந்தியா தான் ஏற்றுமதி செய்கிறது. ஐரோப்பா, நெதர்லாந்து, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா