ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேச அதிபர்கள் டிரம்ப்-புடின் வரும் 15ம் தேதி சந்திப்பு: அமெரிக்காவில் நடக்கிறது
வாஷிங்டன்: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அதிபர் விளாடிமிர் புடினை வரும் 15ம் தேதி சந்தித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையே மூன்றரை ஆண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இப்போரை நிறுத்தாவிட்டால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என டிரம்ப் விதித்த கெடு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.
இதற்கிடையே, டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், ரஷ்யாவின் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் புடினை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து, அதிபர்கள் டிரம்ப்-புடின் இடையேயான சந்திப்பு நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த சந்திப்பு வரும் 15ம் தேதி அலாஸ்காவில் நடக்கும் என டிரம்ப் நேற்று அறிவித்துள்ளார். அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் வரும் 15ம் தேதி அலாஸ்காவில் ஆலோசனை நடத்த உள்ளேன்’’ என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்த ஆலோசனையின் போது போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தம் ஏற்படலாம் என்றும், ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளும் அவரவர் வசம் உள்ள சில பகுதிகளை விட்டுக் கொடுக்கலாம் என்றும் கூறினார். புடினின் அமெரிக்க பயணம் குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் உறுதிபடுத்தவில்லை.
இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்பது குறித்து அமெரிக்கா தரப்பில் பரிந்துரைக்கப்பட்டதற்கு ரஷ்யா மறுத்துள்ளது. இதனால் உக்ரைன் இடம் பெறாத பேச்சுவார்த்தை மூலம் எந்த தீர்வும் எட்டப்படாது என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கூறி உள்ளார். கடைசியாக புடின் கடந்த 2015ல் நியூயார்க்கில் நடந்த ஐநா பொதுச் சபை மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றார்.
* இந்தியா-பாக். போர் மீண்டும் அதே பல்லவி
இந்தியா பலமுறை மறுத்தும் கூட இந்தியா-பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். வெள்ளைமாளிகையில் நேற்று முன்தினம் அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத போரை நிறுத்தினேன். வர்த்தகத்தை வைத்து அந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தேன். அந்த போரில் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன. பல உயிர்கள் பலியாவதை நான் தடுத்திருக்கிறேன். இந்த உலகம் போர் இன்றி அமைதியாக இருக்க வேண்டும். அதனால் ரஷ்யா-உக்ரைன் போரையும் நிறுத்த முயற்சிக்கிறேன்’’ என்றார்.
* தன்னைத்தானே டிரம்ப் அழிக்கிறார்
இந்தியா மீது வர்த்தக போர் தொடர்ந்ததன் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார். அவரது நடவடிக்கை முற்றிலும் குப்பை. மண் அள்ளி போடுவதற்கு சமம். டிரம்ப் பொருளாதார நடவடிக்கை முற்றிலும் தவறானது என்று அமெரிக்க பொருளாதார நிபுணரும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஸ்டீவ் ஹான்கே தெரிவித்தார்.