ரஷ்ய எண்ணெய் வர்த்தக விவகாரம்; எங்கு குறைந்த விலையோ அங்கு வாங்குவோம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி
புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், எங்கு குறைந்த விலையில் கிடைக்கிறதோ அங்கிருந்து எண்ணெய் வாங்குவோம் என ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு, இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் போருக்கு மறைமுகமாக நிதியளிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா ஆரம்பம் முதலே கடுமையாக நிராகரித்து வருகிறது.
முன்னதாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீதான வரியை 50% ஆக உயர்த்தியது. சமீபத்தில் இதுகுறித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ‘இந்தியாவிலிருந்து கச்சா எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் உங்களுக்குப் சிக்கல் இருந்தால், அதை வாங்காதீர்கள். ஐரோப்பாவும், அமெரிக்காவுமே வாங்கும்போது, உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் வாங்காதீர்கள்’ என்று காட்டமாகப் பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்யாவுக்கான இந்தியத் தூதர் வினய் குமார், ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், ‘இந்தியாவின் 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முக்கிய நோக்கம். இந்திய நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ற மலிவான விலையில், எங்கு வேண்டுமானாலும் கச்சா எண்ணெய்யை வாங்கும். எங்கள் நாட்டின் நலனைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து எடுக்கும். இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தகம், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர உதவியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நாடுகளும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டார்.