ரஷ்யாவிடம் இருந்து உரங்கள், ரசாயனங்களை அமெரிக்கா வாங்குவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது: அடித்து சொல்லும் அதிபர் டிரம்ப்
மாஸ்கோ: ரஷ்யாவிடமிருந்து உரங்கள், ரசாயனங்களை அமெரிக்கா வாங்குவது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே இந்திய பொருள்களுக்கு 25% கூடுதல் வரி விதிக்கப்படும் என கடந்த வாரம் தெரிவித்த நிலையில், இருதினங்களுக்கு முன் 25% வரியை மேலும் உயர்த்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மீது அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் வௌியிட்ட அறிக்கையில், “உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடங்கிய பிறகு, உலக சந்தை நிலவரத்தால் ஏற்பட்ட கட்டாயத்தின் பேரிலேயே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணைய் இறக்குமதி செய்கிறது. இந்தியாவை குறை சொல்லும் நாடுகளே அத்தியாவசிய தேவையின்றியும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கின்றன. அதன்படி எரிசக்தி மட்டுமின்றி, உரங்கள், ரசாயனங்கள், சுரங்க பொருள்கள், இரும்புதாது, எஃகு மற்றும் இயந்திரங்களை ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் வாங்குகிறன்றன.
அமெரிக்காவும் தன் அணுசக்தி தொழிலுக்காக யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு, மின்சார வாகனத் தொழிலுக்கான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்களை ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்கிறது’ என பதிலடி கொடுத்திருந்தது. இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்துள்ளார். வௌ்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்கா யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு, மின்சார வாகனத் தொழிலுக்கான பல்லேடியம், உரங்கள் மற்றும் ரசாயனங்களை இறக்குமதி செய்வது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதைப்பற்றி ஆய்வு செய்து விட்டு பின்னர் பதில் சொல்கிறேன்” என கூறினார்.
* டிரம்ப்பின் தூதர் புடினுடன் சந்திப்பு
உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அமெரிக்கா 50 நாள்கள் காலக்கெடு விதித்துள்ளது. இந்த காலக்கெடு முடிவடைய உள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் நேற்று மாஸ்கோ சென்றார். அங்கு கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் வௌியாகவில்லை. ஆனால் இருவரின் சந்திப்பை கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தி உள்ளது.