மரணத்தை வெல்ல ரஷ்யா, சீனா ஆராய்ச்சி.. மனிதர்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க விரிவான மருத்துவ ஆய்வுகள் நடைபெறுவதாக தகவல்!!
மாஸ்கோ: மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டித்து கொண்டு செல்வது குறித்து ஆய்வுகள் ரஷ்யாவில் வேகம் பெற்று இருக்கின்றன. எத்தனை வயதானாலும் இளமையை அப்படியே தக்க வைத்து கொள்ளவும், இயன்றவரை மரணத்தை தள்ளிப்போடவும் ரஷ்யாவில் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9 ஆண்டுகளில் 50 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக Novaya Gazeta Europe என்ற பத்திரிக்கை தெரிவித்து இருக்கிறது. இந்த ஆண்டு மட்டும் ஆய்வுகளுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பில் 4,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்து இருக்கிறது.
இதில் ஒரு ஆய்வு ரஷ்ய அதிபர் மகள் மரியா வொரன்ட்சோவா தலைமையில் மேற்கொள்ளப்படுவதாகவும், ரஷ்யாவில் அரசு துறைகள் தவிர, தனியார் நிறுவனங்களும் வயது மூப்பை தடுத்து மனிதனின் வாழ்நாளை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் உண்டு. 72 வயதான ரஷ்ய அதிபர் புதின், தற்போது துடிப்பான நபராக உள்ளார். வயது மூப்பை தடுப்பது, இறவாநிலை குறித்த ஆய்வுகளில் புதினுக்கு ஆர்வம் அதிகம் என கூறப்படுகிறது.
அண்மையில் சீனா சென்றபோது கூட அந்நாட்டு அதிபர் சீ சின்பிங்குடன் வயது மூப்பு தடுப்பு, இறவாநிலை குறித்து புதின் பேசியிருந்தார். உயிர் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் இளமையை மனிதன் பெறமுடியும் என்றும், மரணத்தையே வெல்லும் சூழல் கூட உருவாகும் என புதின் பேசியிருந்தார். ரஷ்யாவை போல சீனாவும் கூட வயதாவதை தடுத்து வாழ்நாள் நீட்டிப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.